திராவிட மாடலை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை… பாஜகவை வெச்சு செஞ்ச ஸ்டாலின்!

கொங்கு மண்டலத்தில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொ்ள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை:

ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை – கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பதை நான் கம்பீரமாகச் சொல்வேன்.

161 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்கள் மாணவர்களுக்கு இங்கு வழங்கப்பட இருக்கின்றன. 60 கல்லூரிகள் மற்றும் 200 அரசுப் பள்ளிகளுடன், “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் ஆகியோருக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான “சமவாய்ப்பு மையம்” திட்டம் தொடங்கப்படுகிறது.

அதேபோல, கோவை மாவட்டத்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் திட்டம்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் இங்கே பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார், பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கம் திட்டம்! கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஆயிரத்து 810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அது அதிமுகவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பாஜகவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து தான். அந்த தொகுதிகள் பயனைடைய இருக்கின்றன. இதற்காக, அவர்கள் என்னைப் பாராட்டவில்லையென்றாலும், நன்றி சொல்லவில்லையென்றாலும் நான் நிச்சயமாக கவலைப்பட மாட்டேன், பரவாயில்லை! அதையெல்லாம் எதிர்பார்த்து மக்களுக்காக கடமை ஆற்றுகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல!

இது என்னுடைய பொறுப்பு என, மக்களுக்கு அந்த உணர்வோடு நான் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதான். இவர்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லை. நமது அரசின் திட்டங்களால், நாளும் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டு எனக்குப் போதும்.

பல்வேறு மாநில அரசுகளும், தமிழ்நாடு அரசின் முற்போக்கு – முன்னேற்றத் திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய மாநிலத்தில் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால். இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! பொத்தாம்பொதுவாக, எந்த வாக்குறுதியையும் திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்று சிலர் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து நான் கேட்கின்ற கேள்வியெல்லாம், மக்களோடு மக்களாக வந்து – மக்களிடத்தில் வந்து நீங்கள் கேட்க வேண்டும்.

ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து, பேட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளைப் பற்றி எதுவும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது! நான் இன்னும் கேட்கிறேன்,

கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய கோடிக்கணக்கான மகளிர்

தங்களது வீட்டுக்கு மருத்துவப் பணியாளர்கள் வந்து அவர்கள் மூலமாக சிகிச்சை பெற்ற பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மக்கள் இருக்கிறார்கள்.

இலவச மின் இணைப்புப் பெற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டு இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்கள், உழவர்கள்,

இந்த ஓராண்டு காலத்தில், ஓராயிரம் திட்டங்கள்! ஓன்றரை வருடம் தான், இன்னும் ஒன்றரை வருடம் ஆகவில்லை,

அதற்குள் இவ்வளவு திட்டங்கள். நினைத்துப் பாருங்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு என்றால், ஐந்தாண்டு வருடங்களில், அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றித், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாக ஆக்குவதே எங்களுடைய இலட்சியம்! என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.