மதுரையில் நடக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் சேர்க்க தமிழக அரசுக்கு ஆர்வலர்கள் கோரிக்கை 

மதுரை: மதுரையில் சனிக்கிழமை நடக்க இருக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் இடம்பெற செய்ய கால்நடை பராமரிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.ப.மாரிகுமார் கூறியதாவது: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சி நடக்கவிருக்கிறது. தேனியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்து இருக்கிறது. அந்நிய நாட்டு நாய்கள் மோகம் நம் மக்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், நாட்டின நாய்களுக்கென்று பிரத்யேகமாக கருத்தரங்கமும், கண்காட்சியும் ஒருங்கிணைக்கப்படுவது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுதலுக்குரியது.

அதேநேரம், இந்நிகழ்வில் நாட்டின நாய்கள் என்று சொல்லப்படுகிற கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் மற்றும் கோம்பை இன நாய்களுக்கு மட்டும் அனுமதியளித்திருப்பதும், நம் நாட்டின், குறிப்பாக தமிழக வீதிகளில் நம் வாழ்க்கையோடு இணைந்து வசிக்கின்ற ‘சமூக நாய்கள்’ பற்றிய தலைப்புகள் இடம்பெறாததும், அப்படிப்பட்ட சமூக நாய்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த முடியாது என்கிற தகவலும் எங்களை வருத்தமடையச் செய்கிறது.

தமிழ் மண்ணில் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ராஜு சமூக மக்கள் காலெடுத்த வைத்தபோது அவர்களோடு, அவர்களுக்கு துணையாகவும் காவலுக்கும், வேட்டைக்கும் கொண்டுவரப்பட்ட நாய்கள் இன்று இராஜபாளையம் வகை நாட்டின நாய்களாக வகமைப்படுத்தப்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், இந்த மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, காலங்காலமாக நம்மோடு வாழ்ந்து, இன்று அடையாளங்களையும், பெயர்களையும் தொலைத்துவிட்டு புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் ஆதரவின்றித் திரியும் நம் சமூக நாய்களை பாதுகாத்திட இதுபோன்ற தமிழக அரசு நிதியில், அரசு சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் நிகழ்வுகளில் சமூக நாய்களுக்கு போதுமான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே, பொதுமக்களால் பெரும் துயரத்திற்கும், இன்னலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கும் சமூக நாய்களை இனிமேலும் புறக்கணிக்காமல், ஊதாசினப்படுத்தி, அவமானப்படுத்தி அவைகளின் துயரங்களை பெருக்காமல் சமூக நாய்களின் பிரதிநிதிகளையும் இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்க வேண்டும்.அவர்களது வளர்ப்பு, செல்லப் பிராணிகளான சமூக நாய்களோடு பங்கெடுக்க இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் நடக்கவிருக்கும் கண்காட்சியில் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நமது கலாச்சார, பண்பாட்டு காரணிகள் உயிரின பாதுகாப்பு என்கிற நோக்கிலும் இருக்க வேண்டும் என்றால், சமூக நாய்களுக்கு போதுமான அங்கீகாரத்தை கொடுப்பதோடு, பொதுமக்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே, தமிழக முதல்வர், கால்நடைத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் தலையிட்டு இந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கு உரிய உத்தரவை பிறப்பித்து சமூக நாய்களின் பாதுகாப்பிற்கான எங்களது முன்னெடுப்பிற்கு உதவிட வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.