முல்லை பெரியாறு லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி: இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: முல்லை பெரியாறு லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என கூறியுள்ளது. தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பாஜ விவசாய பிரிவு சதீஷ்பாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.1,020 கோடி செலவில் மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறின் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் தேனி மாவட்ட நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். விவசாயப்பணிகள் பாதிக்கும். எனவே, இத் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘கடந்த 2018 முதல் திட்டப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு அரசியல் காரணங்களுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இதுவரையில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் இதுவரை 38 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது. இத்திட்ட பணிகள் முடிந்தால் மதுரையின் தற்ேபாதைய தேவை மட்டுமின்றி, எதிர்கால தேவையும் பூர்த்தி செய்யப்படும். எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் இரு மாநில விவகாரங்களோடு தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.