ஹவுரா:
மேற்கு வங்காளம் ஹவுரா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை பஞ்ச்லாவில் உள்ள துலோர்பாத் பகுதிக்கு அருகே பேருந்தின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த டிரக் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தில் உயிரிழந்த 3 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
“ஹவுராவில் உள்ள பஞ்ச்லாவில் 3 பேர் இறந்ததற்கும், 21 பேர் காயமடைந்ததற்கும் வழிவகுத்த சோகமான விபத்தால் ஆழ்ந்த வருத்தம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன், அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.