சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படாததால், 14-வது ஊதிய பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை” என்று சிஐடியூ செயலாளர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
7 கட்டங்களாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணியிட மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைள் குறித்து பேசப்படன. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் இருந்து சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர், சிஐடியூ செயலாளர் சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற நடைமுறையே நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அரசுத் தரப்பில், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாகத்தான் கடந்த இரண்டு பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய இழுபறி நடந்தது.
அதேபோல், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பஞ்சப்படி நிலுவையைத் தரவேண்டும் என்பது அடுத்த இழுபறிக்கான ஒரு பிரச்சினையாக இருந்தது. இந்த இரண்டு பிரச்சினையிலும், அமைச்சர் ஒரு கட்டத்தில் நேற்று ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினை குறித்து முதல்வரிடம் கூறியிருக்கிறோம். பஞ்சப்படி மற்றும் நிலுவைத் தொகை குறித்து கூடிய விரைவில் நல்ல முடிவை முதல்வர் அறிவிப்பார். அதுகுறித்து ஊடகங்களிடம் நான் அறிவிக்கிறேன். அதுபற்றி கவலை வேண்டாம்.
இப்போது பணியில் உள்ளவர்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தத்தில், இதுதொடர்பாக எப்படி கொண்டு வரமுடியும் என்று கேட்டார். அப்போது இதுகுறித்து எங்களுக்கும் தெரியும், ஆனால், இந்த கோரிக்கை குறித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினோம். அமைச்சரும் ஒத்துக்கொண்டார். எனவே அந்த பிரச்சினையும் அந்த அளவிலே முடிந்துவிட்டது.
ஆனால், மூன்றாண்டா நான்காண்டா என்ற பிரச்சினை முடியவில்லை. எல்லா மட்டங்களிலும், எல்லா வகையிலும் நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லி பேசி பார்த்தோம் முடியவில்லை. போக்குவரத்து துறைக்கு மட்டும் மூன்றாண்டு கொடுத்தால், மின் வாரியத்தில் கேட்பார்கள் மற்ற துறைகளில் கேட்பார்கள் என்று நொண்டி சமாதானத்தை கூறுகின்றனர்.
மின் வாரியத்தில, ஊதிய உயர்வு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. எனவே அவர்கள் இதுவரை எந்த பிரச்சினையையும் அவர்கள் கிளப்பியது இல்லை. எங்களுக்கு ஜெயலலிதா காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.
எனவே அதிகாரிகள் கூறுவது இப்போது நொண்டி சமாதானம். எனவே அரசு உறுதியான நிலை எடுத்து 3 ஆண்டுகள் என அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். எங்களால் இயலாது என்றும் அரசும், அமைச்சரும் கூறிவிட்டனர். இதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது வருத்தமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை” என்று அவர் கூறினார்.