புதுடெல்லி: ‘என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வெட்கக்கேடான செயல்,’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். என்டிடிவி என சுருக்கமாக அழைக்கப்படும் ‘புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்’ (என்டிடிவி) தொலைக்காட்சி நிறுவனம், என்டிடிவி 24×7, என்டிடிவி இந்தி மற்றும் என்டிடிவி லாபம் ஆகிய 3 தேசிய செய்தி சேனல்களை இயக்கி வருகிறது. இதன் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் ஏற்கனவே வேறு நிறுவனங்களின் மூலம் வாங்கி விட்டது.
இதனிடம் இருந்து மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக நேற்று முன்தினம் அதானி குழுமம் அறிவித்தது. இதை வாங்கினால், என்டிடிவி.யின் முதன்மை பங்கு நிறுவனமாக அதானி குழுமம் மாறும். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான ரமேஷ் ஜெய்ராம் தனது டிவிட்டரில், ‘என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வெட்கக்கேடான செயல்,’ என்று கண்டித்துள்ளார்.
பங்கு விலை 5% உயர்வு
என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதாக அதானி குழுமம் அறிவித்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 52 வாரங்களுக்கு பிறகு, நேற்று 5% உயர்ந்து, ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.384.50 ஆக இருந்தது. அதே போல், தேசிய பங்கு சந்தையிலும் என்டிடிவி நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில், 4.99 % உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.388.20 ஆக விற்பனையானது.