சென்னை: அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் இதுவரை 4 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிய திரைப்படம் ‘விவேகம்’
அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
வீரம் கொடுத்த கம்பேக்
கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படத்திற்கு, சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார், அதிலிருந்தே அவர் சிறுத்தை சிவா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ‘சிறுத்தை’ படத்தின் மேக்கிங்கை பார்த்த அஜித், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியானார். அப்படி உருவான திரைப்படம் தான் ‘வீரம்.’ அஜித், தமன்னா, விதார்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான இத்திரைப்படம், அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது.
வீரம் டூ வேதாளம்
வீரம் படத்தின் வெற்றியை விட இன்னொரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க முடிவெடுத்தது அஜித் – சிவா கூட்டணி. அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தது இவர்கள் கூட்டணியில் இரண்டாவதாக வெளியான ‘வேதாளம்.’ அஜித்தின் லுக், மேனரிசம், அதிரடியான ஆக்சன் அனிருத்தின் ‘ஆலுமா டோலுமா’ என அனைத்துமே பட்டையைக் கிளப்பின. இதனால், அஜித் ரசிகர்கள் செம்ம குஷியானர்கள்.
தொடர்ந்த V செண்டிமெண்ட்
வீரம், வேதாளம் என அடுத்தடுத்து ‘V’ -யை டைட்டிலின் முதல் எழுத்தாக கொண்டு ஹிட் கொடுத்த அஜித் – சிவா கூட்டணி, மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் இணைந்தனர். இந்தமுறையும் V செண்டிமெண்ட்டில் டைட்டிலை கன்ஃபார்ம் செய்த படக்குழு, படத்தையும் வியாழக்கிழமை ரிலீஸ் செய்தது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் அஜித், சிக்ஸ் பேக் வைத்து மஜா செய்திருப்பார். 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வெளியான விவேகம், இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
விவேகம் வெற்றியா தோல்வியா?
வீரம், வேதாளம் திரைப்படங்கள் அளவிற்கு, விவேகம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. ரிலீஸானதில் இருந்து சில தினங்கள் நல்ல ஓப்பனிங் கிடைத்த விவேகம், இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் டல் அடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால், இயக்குநர் சிவாவை அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட விவேகம், ரொம்பவே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு காரணம், அஜித் தான் கதைகளில் நிறைய மாற்றங்கள் செய்ய சொன்னதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வாசத்துடன் முடிந்த கூட்டணி
சிவா மீது எழுந்த இந்த விமர்சனத்தை போக்கவே, அஜித் ‘விஸ்வாசம்’ படம் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அஜித், நயன்தாரா என உருவான இத்திரைப்படம், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனால், சிவாவும் அஜித்துக்கு ஒரு ஹிட் கொடுத்த திருப்தியோடு அடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் இணைந்தார். இப்போது சூர்யாவின் புதிய படத்தை இயக்கும் சிவா, விரைவில் அஜித்துடன் இணைய வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.