300 பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை

கொழும்பு: இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இலங்கை அதன் பெருவாரியான தேவையை இறக்குமதி வழியே நிறைவேற்றி வந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு உள்ளானது. இந்தியா உட்பட அண்டை நாடுகளிடம் உதவி பெற்றே அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், சாக்லேட், முகப்பூச்சு, வாசனை திரவியம், ஷாம்பூ உட்பட 300 வகையான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட பொருட்கள், ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்னதாக அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் இலங்கைக்குள் வரும் பட்சத்தில் அவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐஎம்எஃப் உதவி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததால், விலைவாசி பல மடங்கு உயர்ந்தது. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்க வேண்டிய சூழல் உருவானது. நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஜூலை மாதத்தில் மக்கள் போராட்டம் உச்சமடைந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேசசெலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) உதவியை இலங்கை எதிர்நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.