கோவையில் அதிமுக கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது பேசிய அவர், “கோவை வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். கோவை மாநகராட்சியில் 150 கோடி செலவில் 500 பணிகள் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது. அதை திமுக அரசு முடக்கி விட்டது” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், “இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் மேல் சுமார் 52 சதவீத மின் கட்டண உயர்வை திணிப்பதை கைவிட வேண்டும். அதேபோல் சொத்து வரி உயர்வையும் தமிழக அரசு கைவிட வேண்டும். திமுக 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
போதை பொருள் தாராளமாக தமிழ்நாட்டில் கிடைக்கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. திமுக அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகத்திலேயே சூதாட்டத்திற்கு கருத்துக்கேட்பு கூட்டம் எங்காவது நடந்தது உண்டா? ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் ஏற்றாமல் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
கும்பகர்ணன் போல் இந்த அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பிக் கொண்டு இருக்கிறோம்” என்றார்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை, ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பி தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும். வேடந்தாங்கல் பறவை போல காலத்திற்கு ஏற்ப ஆறுகுட்டி செயல்பட்டு இருக்கிறார்” என்று காட்டமாக பதில் அளித்தார் எடப்பாடி பழனிசாமி.