புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் நீண்ட கால நண்பர் அதானி முறைகேடாக குறுக்கு வழியில் பிரபல ஊடக நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது பொருளாதார, அரசியல் அதிகார குவிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சுதந்திரமான ஒரு ஊடகத்தை கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கான வெட்கக்கேடான நடவடிக்கையைத் தவிர இது வேறொன்றுமில்லை.
மர்மமான விஷயம்
இதில் மர்மமான விஷயம் என்னவென்றால், ஒருவர் கொடுத்த கடனை மற்ற அந்த இரண்டு உறுப்பினர்களும் எப்படி ஆயுதமாக பயன்படுத்தி தொலைக்காட்சி நெட்வொர்க்கை முறைகேடான வழியில் கையகப்படுத்தினார்கள் என்பதுதான். முரண்பாடாக இதில், விஷ்வ பிரதான் நிறுவனம் மிகவும் நெருக்கமாக செயல்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
என்டிடி நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அதன் நிறுவனர்களின் ஒப்புதல் மற்றும் ஆலோசனையின்றி தகவல் தெரிவிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக என்டிடிவி சேனல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்னணி
என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மேலும், 26 சதவீத பங்குகளை வாங்க அந்த குழுமம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், என்டிடிவி நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகாரம் அதானி குழுமத்துக்கு கைமாறியுள்ளது.
சுதந்திரமாக செயல்பட்டு வந்த பிரபல ஊடக நிறுவனம் பெருநிறுவன முதலாளிகளின் கைகளுக்கு மாறியுள்ளது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.