யாருடைய தலையீடும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் வாழ்கிறோம் – நீதிமன்றத்தால் சேர்ந்து வாழும் தன்பாலின இளம் பெண்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின், இவரது தோழி பாத்திமா நூரா. இவர்கள் இருவரது பெற்றோரும் வளைகுடா நாட்டில் வேலை செய்தனர். அப்போது தோழிகள் இருவருக்குள்ளும் தன்பாலின சேர்க்கை ஏற்பட்டது.

இதை அறிந்து பாத்திமா நூராவை பெற்றோர் கேரளாவுக்கு அனுப்பினர். ஆனால் அவரைத் தேடி, கேரளாவுக்கே வந்து விட்டார் ஆதிலா நஸ்ரின்.

ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து கடந்த மே 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். உறவினர்கள் தேடி பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர். ஆதிலா நஸ்ரின், தங்கள் மகள் பாத்திமா நூராவைக் கடத்தி வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த ஆதிலா நஸ்ரின், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் 31-ம் தேதி அனுமதி வழங்கியது. கடந்த 3 மாதங்களாக ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்து வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், ‘‘எங்கள் உணர்வைப் புரியாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர். நானும், என் தோழியும் எங்கள் கருத்தில் உறுதியாக இருந்து, நீதிமன்ற உத்தரவுப்பெற்று சேர்ந்துள்ளோம். இப்போது யாருடைய தலையீடும் இல்லாமல், ஒரு பறவையைப் போல் சுதந்திரமாக வாழ்கிறோம். நமக்காக வாழாத வரை வாழ்க்கை முழுமையடையாது. நாங்கள் சென்னையில் வாடகைக்கு பிளாட் தேடிய போதும் கூட எங்கள் அடையாளத்தை மறைக்கவில்லை. பெரும்பாலான பெற்றோருக்கு இதுகுறித்துப் புரிதல் இருப்பதில்லை. நாங்கள் இருவருமே வேலை செய்வதால் எங்களிடம் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தது. அதனால் உயர் நீதிமன்ற படியேறி சட்ட உரிமையை நிலைநாட்டி சேர்ந்து வாழ்கிறோம். அனைத்து விஷயங்களிலும் தன்பாலின தம்பதியினர் சமம்தான். ஒரே பாலின உறவு குறித்த புரிதலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவையிருக்கிறது’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.