பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் தலைவர் சுபாஷினி அலி மற்றும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வியாழக்கிழமை ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு இன்று(ஆகஸ்ட் 25) விசாரணை நடத்துகிறது.
மேலும் பெகாசஸ் வழக்குகளையும் இந்த அமர்வு இன்று விசாரிக்கிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்பட்டதாக புகார் எழுந்தது. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, காரசார விவாதம் நடைபெற்றது.
பெகாசஸ் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அதோடு இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தொடரப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
பெகாசஸ் மென்பொருளை அங்கீகரிக்கப்படாத கண்காணிப்புக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொள்கிறது.
கடந்த 2002இல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உள்பட 14பேர் ன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 15அன்று குற்றவாளிகள் 11 பேர் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஜனவரி 12ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது. இது குறித்து தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மேலும் விசாரணை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil