டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
ஹத்ராஸில் பழங்குடி இனப் பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 4 பேரும் அப்பெண்ணின் நாக்கை அறுத்து சாலையில் வீசினர். அப்பெண் மீட்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். டெல்லியில் உயிரிழந்த அப்பெண்ணின் உடலை இரவோடு இரவாக உ.பி.கிராமத்துக்கு கொண்டு வந்த போலீசார் அப்போதே தகனமும் செய்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் இது பெரும் பிரச்சனையாக வெடித்தது. இதனையடுத்து டெல்லியில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்காக பணிபுரிந்த சித்திக் கப்பான், ஹத்ராஸ் சென்றிருந்தார். அவரை உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். சித்திக் கப்பானுடன் சென்ற அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு தரப்பில் கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் இணைந்து சித்திக் கப்பான் சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்ற வந்தார்; ஆகையால் அவர் கைது செய்யப்பட்டார்; அவர் மீது தேசதுரோக சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியது.
ஹத்ராஸ் சம்பவத்தைப் போலவே, சித்திக் கப்பான் கைது சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச சிறையில் அடைக்கப்பட்ட சித்திக் கப்பான் தமக்கு ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சித்திக் கப்பான் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.