காஷ்மீரில் 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன, தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான தீவிரவாதி தன்னை தாக்குதலுக்கு அனுப்பியவர் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பல்லன்வாலா பகுதியில் அக்னூர் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 72 மணி நேரத்தில் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. முன்னதாக செவ்வாய்க் கிழமை காலையில் எல்லையில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தனர். மற்றொரு தீவிரவாதி காயங்களுடன் தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரிகேடியர் கபில் ரானா கூறுகையில், “பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியின்போது உயிரிழந்தனர். அந்த உடல்களைக் கைப்பற்றியுள்ளோம். தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை அவர்கள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் இருக்கும் போதே படைகள் கண்டறிந்தன. இருப்பினும் அவர்கள் கண்ணிவெடியில் சிக்கி இறந்தனர். அவர்களிடமிருந்து ஏகே 56 ரைஃபில்ஸ், புல்லட்டுகள் மற்றும் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன ” என்றார்.
தீவிரவாதி கைது: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். ரஜோரி மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த நபர் ஏற்கெனவே ஒருமுறை எல்லையில் ஊடுருவிய போது மனிதாபிமான அடிப்படையில் அவரை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தனர். ஆனால் அதே நபர் தற்போது மீண்டும் ஊடுருவல் முயற்சியில் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர், பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒருவர் எனக்கு 30,000 பணம் கொடுத்தார். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துமாறு கூறினார் என்றார்.
அந்த நபர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்த்தில் உள்ள சப்ஸ்கோட் என்ற கிராமத்தைச் சேர்ந்த தபரக் ஹுசைன் எனத் தெரியவந்துள்ளது. அவரை அனுப்பிவைத்தது கர்னல் யூனுஸ் சவுத்ரி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த கர்னல் கொடுத்த பணத்தையும் தபரக் ஹுசைன் தன் வசமே வைத்திருந்தார்.