சென்னை : தமிழ் சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்து, தனக்கென சினிமா, அரசியல் இரண்டிலும் தீவிர ரசிகர்களையும், தொண்டர்களையும் வைத்திருப்பவர் விஜயகாந்த்.இன்று விஜயகாந்த் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து, பல கேரக்டர் ரோல்களில் நடித்து, பிறகு ஹீரோ ஆனவர் விஜயகாந்த். கிட்டதட்ட 150 க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து, தனக்கென தனி ஸ்டையிலை வகுத்து வைத்துள்ளார்.
பல டைரக்டர்கள், பல நடிகர் – நடிகைகள், பல தலைமுறை நடிகர்கள் என இணைந்து நடித்த விஜயகாந்த் பற்றி பலரும் அறியாத விஷயங்களை அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்க்கலாம்.
சம்பளத்தில் கரார் காட்டாத நடிகர்
ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து தரப்பான படங்களிலும் விஜயகாந்த் நடித்துள்ளார். சம்பளத்தை பற்றி ஒரு போதும் விஜயகாந்த் கவலைபட்டத கிடையாது. பல படங்களுக்கு படம் வெற்றி பெற்ற பிறகே அவர் சம்பளம் வாங்கி உள்ளார். ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் பேசிய சம்பளத்தை விட குறைவாக கொடுத்த போதிலும் வாங்கிக் கொண்டுள்ளார்.தனது நண்பர்களின் படங்களில் கெஸ்ட் ரோல் அல்லது சப்போர்டிங் ரோலில் நடிக்க விஜயகாந்த் சம்பளம் வாங்கியதில்லை.
3 ஷிப்ட்களில் நடித்தவர்
உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே விஜயகாந்த் சினிமாக்களில் நடிப்பதை நிறுத்தினார். ஆனால் சினிமாவில் பிஸியாக இருந்த காலங்களில் ஓய்வு இல்லாமல் 3 ஷிப்ட்களில் கூட விஜய்காந்த் நடித்துள்ளார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்தால் ஒரு படத்தின் ஷுட்டிங் கூட நின்றதாகவோ, தாமதமானதாகவே இதுவரை இருந்ததே இல்லை.
விஜயகாந்த்தால் சினிமாவிற்கு வந்தவர்கள்
மிக தன்மையான, இரக்க குணம் கொண்ட நடிகர் என பெயர் வாங்கியவர் விஜயகாந்த். பல திறமையான நடிகர்களை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவரை சேரும். மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களை சினிமாவிற்கு கொண்டு வந்தவர் விஜயகாந்த் தான். இவர்களுடன் இணைந்து நடித்தும் உள்ளார். சினிமாவை தாண்டி பலருடனும் நல்லுறவை தொடர்ந்தவர் விஜயகாந்த்.
100வது படமும் 100 நாள் ஓடியது
விஜயகாந்த் பீக்கில் இருந்த காலத்தில் ஃபீல்டில் இருந்த பல நடிகர்களின் 100 வது படம் தோல்வியையே சந்தித்துள்ளன. ரஜினியின் ராகவேந்திரா, கமலின் ராஜபார்வை ஆகியன தோல்வி அடைந்த நிலையில் விஜயகாந்த்தின் 100 வது படமான கேப்டன் பிரபாகரன் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த படம் விஜயகாந்த்திற்கு பிரம்மாண்ட வெற்றியை மட்டுமல்ல மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்று தந்தது.
நடிகர் சங்கத்திலும் முக்கிய பங்கு
தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான். நீண்ட காலம் நடிகர் சங்க தலைவராக இருந்தவர். அந்த சமயத்தில் சங்கத்திற்கு நிதி திரட்ட பல ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளை நடத்தும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்தியவர் இவர் தான். நலிவடைந்த க்லைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறையை கொண்டு வந்ததும் இவர் தான். வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட பல நடிகர்களுக்கும் உதவி செய்து, ஒரு நல்ல நடிகர், ஒரு நல்ல தலைவருக்கு உதாரணமாக விளங்கியவர்.