வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமைத்த வல்லுநர் குழு சமர்பித்துள்ள அறிக்கையில், இந்த வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, ‘எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று (ஆக.,25) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வல்லுநர் குழுவின் அறிக்கை குறித்து நீதிபதிகள் கூறியதாவது: குழுவின் அறிக்கை மூன்று பாகங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகம் தொழில்நுட்பக் குழுவும், ஒரு பாகம் நீதிபதியும் சமர்பித்துள்ளார். அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 5 செல்போன்களில் உளவு பார்த்ததற்கான மென்பொருள் இருந்ததாகவும், ஆனால் அது பெகாசஸ் மென்பொருளுக்கு சம்பந்தப்பட்ட உளவு மென்பொருள் என்று அறிக்கையில் குறிப்பிடவில்லை.
விசாரணையின்போது மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குழுவினர் தெரிவித்துள்ளனர். இணைய பாதுகாப்பை மேம்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவும், உளவு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வழிமுறைகளை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளனர். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், அறிக்கையை விரிவாக ஆராய்ந்த பிறகு கருத்து தெரிவிப்பதாக கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement