கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில், வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி, போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதுமட்டும் இல்லாமல் இந்த வன்முறையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவினர் மற்றும் சிபிசிஐடி போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்ஃபோன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறையை தூண்டுதல், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தல் என ,மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலி தகவல்களை பரப்பியவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ்அப் குழு உருவாக்கி 400 பேரை உறுப்பினராக சேர்ந்து போராட்டத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.