தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிறந்ததிலிருந்து இனம் காணாத நோயால், வலிகளை மட்டுமே அனுபவித்து வரும் மலைக்கிராம சிறுமிகள் தங்களது நோய்க்கு நிரந்தர தீர்வு காண உயர் சிகிச்சை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை கிராமத்தைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த முனியன் – கமலா தம்பதியினர் சித்தேரி மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 11 வயதான திருமலர் (கேட்கும் சவால் உடையவர்), 4 வயதான தேவசேனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிறிது காலம் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட முனியன், தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்துள்ளார். இதனால் முனியனால் எந்த வேலைகளுக்கும் செல்ல முடிவதில்லை. இந்நிலையில் முனியன் மனைவி கமலா மட்டுமே கிடைக்கின்ற கூலி வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும் இருப்பதற்கு சொந்த வீடு இல்லாமல், மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலத்தில் சிறியதாக வீடு அமைத்து, அதில் மின்சாரம், கதவுகள் கூட இல்லாத நிலையில், புடவையை கதவாக திரை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
இனம் புரியா நோயால் இன்னலுக்கு ஆளாகும் சிறுமிகள்:
இந்நிலையில் இந்த தம்பதிக்கு பிறந்த திருமலர் மற்றும் தேவசேனா ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் இனம் காணாத புதிய நோய் பிறப்போடு இணைந்து வந்துள்ளது. இந்த நோயால் குழந்தைகளுக்கு ஆங்காங்கே தீயிட்ட கொப்பளம் போல் வருவதும், சிறிது நேரத்தில் அது உடைவதுமாக இருக்கிறது. மேலும் இந்த கொப்பளங்கள் உடைந்தவுடன், ஆங்காங்கே காயங்கள் ஏற்படுகிறது. இந்தக் காயங்கள் சரியாகும் போது காயம் ஏற்பட்ட இடங்கள் வெள்ளை தழும்பாகவே நின்று விடுகிறது. மேலும் வெள்ளை தழும்போடு நிற்பதில்லை. மீண்டும் அதே பகுதிகளில் கொப்பளங்கள் வருவதும், மீண்டும் உடைவதும் என, இது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இந்த குழந்தைகளுக்கு மாறி மாறி இது போன்ற கொப்பளங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
தற்காலிக தீர்வு மட்டுமே தருகிறார்கள்!
இதற்கு முனியன் தம்பதியினர் பல்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்கின்ற இடங்களில் இது போன்ற பாதிப்புகள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என கேட்டுள்ளனர். இது பிறப்பு முதலே என்று தெரிவித்தால், இதனை சரி செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டு, இந்த காயங்களுக்கு தற்காலிகமாக மருந்துகளை மட்டுமே கொடுக்கின்றனர். இந்த மருந்துகளை குழந்தைகள் மீது தேய்க்கும் பொழுது இரண்டு நாட்களுக்கு இந்த கொப்பளங்களும் காயங்களும் சரி ஆகின்றன. ஆனால் மீண்டும் இரண்டு நாட்களுக்கு பிறகு கொப்புளங்கள் வர தொடங்கி விடுகிறது.
என்ன நோய் என்றுகூட தெரியவில்லை!?
இந்த நோயினை கண்டறியவும், முடியாமல் சிகிச்சை பெறவும் முடியாமல், இந்த மலைவாழ் பழங்குடியின ஏழை குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கையில் பணம் இருக்கும் பொழுது தனியார் மருத்துவமனைகளுக்கும், பணம் இல்லாத பொழுது அரசு மருத்துவமனைகளுக்குமே சிகிச்சைக்காக செல்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு எந்த மருத்துவமனையிலும், எந்த மருத்துவரும் இந்த நோயின் பாதிப்பு எதனால் வருகிறது, என்பது குறித்து இதுவரை தெரியப்படுத்தவில்லை. இந்த இனம் காணாத நோயால் சிறு குழந்தைகள் மட்டும் இல்லாமல் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில தருணங்களில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணி வருகின்றனர். மேலும் போதிய வருவாய் மற்றும் படிப்பறிவு இல்லாத இந்த பழங்குடியின குடும்பத்தினர் மலையடிவாரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்ற இடத்திலேயே சிறிதாக பெட்டிக்கடை ஒன்று வைத்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
பள்ளி செல்லவே சிரமப்படும் அவலம்!
போதிய படிப்பறிவு இல்லாததால் இந்த நோய் குணப்படுத்துவதற்கு வேறு யாரை அணுக வேண்டும்? வேறு எங்கு செல்ல வேண்டும் என்ற வழி தெரியாமல் இருந்து வருகின்றனர். மேலும் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளான திருமலர் தற்பொழுது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். உடல் முழுவதும் கொப்பளங்கள் வருவதால், நடக்க முடியாத நிலையில் இரண்டு குழந்தைகளுமே இருக்கின்றன. ஆனால் திருமலருக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. இதனால் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். ஆனால் பள்ளிக்கும் தனது வீட்டுக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இதனால் இவர் கல்வி கற்பதற்கு சிரமமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணினாலும், சிறுமி திருமலர் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தனது தனக்கு இருக்கும் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் அன்றாடம் நடந்தே சென்று பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.
தமிழக முதல்வர் உதவ வேண்டும்!
வலிகளை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்து வரும் மலைக்கிராம சிறுமிகள் தங்களது நோய்க்கு நிரந்தர தீர்வு காண உயர் சிகிச்சை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மலையடிவாரத்தில் போதிய வசதி இல்லாமல் இருந்து வரும் இந்த குடும்பத்தினரின் வீட்டிற்கு அருகிலேயே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அங்கிருந்து இவர்கள் மின்சாரத்தை பெறுவதற்கு கூட வசதி இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இந்த சிறுமிகளின் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பை உரிய முறையில் ஆய்வு செய்து, அதற்கு உயரிய சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இருக்க இடம் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் இந்த மலைவாழ் ஏழை குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அதில் அரசு வீடு கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM