பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை – விசாரணை குழு அறிக்கை!

மால்வேர் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று தொலைபேசிகளை ஆய்வு செய்யும் பணிக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக உரிமை போராளிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரான்ஸை சேர்ந்த ஊடக நிறுவனமான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகைகள் இணைந்து இந்த தகவலை புலனாய்வு செய்து வெளியிட்டது. ஆனால், இந்தச் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம் என்று என்எஸ்ஓ விளக்கமளித்தது. அதேபோல், இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, இந்த குற்றசாட்டுகள் அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

பெகசஸ் உளவு விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் நிபுணர் குழுவை நியமித்தது. அக்குழுவானது உச்ச நீதிமன்றத்தில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், மால்வேர் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று தொலைபேசிகளை ஆய்வு செய்யும் பணிக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய மென் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக குடிமக்களின் தனியுரிமை மீறப்படலாம் என்ற கவலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தலாம். எனவே கண்காணிப்புக்காக இத்தகைய மென்பொருட்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கைகளை தேவை எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், சைபர் தாக்குதல்களை விசாரிப்பதற்கும், நாட்டின் இணைய பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் சிறப்பு புலனாய்வு அமைப்பு இருக்க வேண்டும் எனவும் விசாரணைக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், சட்ட விரோதமான உளவு நடவடிக்கைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வழிமுறைகளை உருவாக்கவும், இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டும் வரவும் நிபுணர் குழு தாக்கல் செய்த 3 பக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 5 செல்போன்களில் உளவு பார்த்ததற்கான செயலி இருந்ததாகவும், ஆனால் அது பெகாசஸ் மென்பொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட செல்போன்களில் ஸ்பைவேர் தாக்கியதற்கான அதிக ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்றவிசாரணையின் போது பாதுக்காப்பு காரணங்களுக்காக அறிக்கையை பொதுவெளியில் தர முடியாது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.