தமிழ் திரையுலகில் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் சிறப்பான நிலையை எட்டியவர்
. இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒருசில முயற்சிகளிலோ வந்து விடவில்லை. சாமானியராக இருந்து இந்தளவிற்கு பெயர், பணம், புகழ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார். திரையுலகில் தொடக்க காலத்தில் இருந்தே அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு கொண்டவர். உதவிகள் கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொன்னதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் உரிய மரியாதை கொடுத்து பேசுவார்.
குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் குறை வைத்ததே கிடையாது. பசித்த வயிறுக்கு மனம் குளிரும் அளவிற்கு சாப்பாடு போடுவார். நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது சக கலைஞர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் நேரம் வரும் என்று காத்திருக்க மாட்டார். கையில் இருக்கும் காசை எடுத்து கொடுத்து அவரே நேரடியாக இறங்கி உதவி செய்வார். தவறு என்று தெரிந்தால் அதிரடி தான். சட்டென்று கை நீட்டி விடுவார். அடுத்த சில நிமிடங்களில் மறந்து விட்டு குழந்தை போன்று செயல்படத் தொடங்கி விடுவார். தனது நற்பணி மன்றங்கள் மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரசிகர்களை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றியதில் விஜயகாந்த் முன்னெடுத்த செயல்பாடுகள் தான் முக்கிய காரணம். இதுவே தமிழகம் முழுவதும் ஆழமாக வேரூன்றி அரசியல் களத்தில் தடம் பதிக்கவும் உறுதுணையாக இருந்தது. 2006 சட்டமன்ற தேர்தல், 2009 மக்களவை தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் விஜயகாந்த் வகுத்த வியூகம் மற்றும் செயல்பாடுகள் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் இருந்து சரிவு முகமாக தான்
இருக்கிறது.
இதற்கு பிரேமலதாவின் மற்றும் குடும்பத்தாரின் தலையீடும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது உடல்நலக்குறைவால் விஜயகாந்த் தொடர்ச்சியான ஓய்வில் இருக்கிறார். எனவே கட்சி முழுவதும் பிரேமலதாவின் கைகளுக்கு சென்றுவிட்டது. இவர் தன்னுடைய தலைமையில் கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கான போதிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் பெரிதும் சிரமப்பட்ட போது, கட்சி நிதி நெருக்கடியில் தவித்து வருவதாக கூறி உதவி செய்ய பிரேமலதா முன்வரவில்லை. இதனால் பலர் போட்டியிடாமல் விலகிக் கொண்டனர். எனவே கட்சியின் நிதி நிலையை சரிசெய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதன்பிறகு கட்சியினரை அரவணைத்து செல்லும் போக்கை கடைபிடிப்பது அவசியம். ஏனெனில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை அடுத்து தேமுதிகவில் இருந்து வெளியேறி மாற்று கட்சிகளில் சேர்ந்த முக்கிய புள்ளிகள் ஏராளம்.
விஜயகாந்துக்கு புரட்சி கலைஞர் பட்டம்; என்ன காரணம்? மனம் திறக்கும் கலைப்புலி தாணு!
அவர்கள் அப்போது முன்வைத்த குற்றச்சாட்டு பிரேமலதா சரியான முடிவெடுக்கவில்லை என்று தான். குடும்பத்தில் ஆளுக்கொரு நாட்டாமை செய்வதாகவும் குற்றம்சாட்டினர். எனவே ஒன்றுபட்ட தலைமையை உறுதி செய்வது பிரேமலதாவின் கைகளில் தான் இருக்கிறது. கட்சியை சரியாக வழிநடத்த திறமையான நபர்களின் வழிகாட்டுதல் குழு தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி தேமுதிகவில் திறமை வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவை. உறுதியான முடிவுகள் எடுத்தால், கூட்டணி விஷயத்தில் தெளிவாக இருந்தால் அனைத்தும் சாத்தியம்.
அங்க ஒரு கால், இங்க ஒரு கால் என்று குழப்பக் கூடாது. மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். வெறுமனே அறிக்கை அரசியல் செல்லுபடியாகாது. தேமுதிக என்ற கட்சியை எந்த நோக்கத்திற்காக விஜயகாந்த் உருவாக்கினாரோ? அந்த கட்சிக்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் என்னென்ன? ஆகியவற்றை மனதில் இருத்திக் கொண்டு செயல்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பிரேமலதாவிற்கு இருக்கிறது. இத்தகைய விஷயங்களை விஜயகாந்தின் ஆரம்ப கால அரசியல் நடவடிக்கைகளை பார்த்து பிரேமலதா கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.