'ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது' – பில்கிஸ் பானு வழக்கில் மஹூவா மொய்த்ரா கருத்து

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமானது. இப்படி விடுவித்து மாலை அணிவித்து லட்டு கொடுத்து கொண்டாடுவதற்கு அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கானது. இது அரிதினும் அரிதான வழக்கு. இது மரண தண்டனைக்கு தகுதியான வழக்கு. அதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றால் அது ஆயுள் முழுமைக்குமானது. அதில் மன்னிப்புக்கு இடமில்லை. அதுவும் எந்த நியாயமான காரணமும் இல்லாமல் 11 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாலை, இனிப்புகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மகளிரணியினரின் அளந்து வடிக்கும் கண்ணீர் வெறும் ஏமாற்று” என்று தெரிவித்திருக்கிறார்.


— Mahua Moitra (@MahuaMoitra) August 25, 2022

கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது. நடப்பு கொள்கையின் கீழ் இவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. 11 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதற்கிடையில், 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் திரிணமூல் எம்.பி. தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.