டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஃபார்முலா 1 டிரைவர் நரேன் கார்த்திகேயனின் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நரேன் கார்த்திகேயன் இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 விளையாட்டு வீரர் என்பதும், அதேபோல் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் நிறுவனம், நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தின் பங்குகளை எத்தனை சதவீதம், எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயனின் ‘டிரைவ்எக்ஸ்’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் 48.27 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த பங்குகளை டிவிஎஸ் ரூ.85.41 கோடிக்கு வாங்கியதாக அறிவித்தது. டிவிஎஸ் நிறுவனம் ‘டிரைவ்எக்ஸ்’ என்ற பிராண்டை இயக்கும் என்கார்ஸ் மொபிலிட்டி மில்லினியல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்எக்ஸ்
டிரைவ்எக்ஸ் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தல், வர்த்தகம் செய்தல் மற்றும் விநியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட டிரைவ்எக்ஸ் ஐந்து நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது.
சுதர்சன் வேணு
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு கூறியபோது, ‘இரு சக்கர வாகன சந்தை இன்று பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது. டிரைவ்எக்ஸ் இவ்வளவு குறுகிய காலத்தில் நல்ல முறையில் இயங்கி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. நரேன் மற்றும் அவரது குழுவினர் ஒரு தனித்துவமான தளத்தை உருவாக்கியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
நரேன் கார்த்திகேயன்
டிரைவ்எக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நரேன் கார்த்திகேயன் கூறுகையில், டிரைவ்எக்ஸ் நிறுவனம், இரு சக்கர வாகன டிஜிட்டல் முறையில் இயங்கும் முதல் வணிகமாகும். தனித்துவமான பகுப்பாய்வு, சரியான தலைமை திறன், திறமையான ஊழியர்களுடன் அனைத்து பிராண்டுகளுக்கும் சேவை செய்கிறது என்று கூறியுள்ளார்.
புதிய வணிக மாதிரிகள்
மேலும் இரு சக்கர வாகனப் பிரிவில் புதிய வணிக மாதிரிகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். வரவிருக்கும் ஆண்டுகளில், டிரைவ்எக்ஸ் இந்தியா முழுவதும் சிறந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
TVS Motor picks 48.27 per cent stake in Narain Karthikeyan’s DriveX
TVS Motor picks 48.27 per cent stake in Narain Karthikeyan’s DriveX | நரேன் கார்த்திகேயன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிவிஎஸ்.. எத்தனை கோடி தெரியுமா?