வாஷிங்டன்: டெக்சாஸில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு வறண்ட ஆறு ஒன்றில் 11 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மாகாணங்களில் ஒன்று டெக்சாஸ். கடற்கரைகளை ஓட்டி அமைந்துள்ள இம்மாகாணத்தில் டைனோசர்களின் கால்தடங்கள் முன்னரே கண்டறியப்பட்டிருந்தன. இதன் காரணமாக டெக்சாஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி டைனோசர் பள்ளத்தாக்கு பூங்கா என்றழைக்கப்படுகிறது. இந்த நிலையில், வறட்சி காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் பல ஆறுகள் வறண்டு உள்ளன. இதில் டைனோசர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பூங்காவில் ஓடிக் கொண்டிருந்த நதியும் வற்றியுள்ளது. இந்த வற்றிய நதியில்தான் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாகாண வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கால்தடங்கள் அக்ரோகாந்தோசொரஸ் என்ற டைனோசர் வகையை சேர்ந்தவை. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்ரோகாந்தோசொரஸ் வகை டைனோசர்களின் கால்தடங்கள் கண்டறியப்படாமல் இருந்த நிலையில், தற்போது டெக்சாஸில் அவற்றின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த மாதம் சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள லெஷன் என்ற நகரத்தில் சுமார் 26 அடி நீளம் கொண்ட டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது.
டைனோசர்கள் அழிந்தது எப்படி ? – சுமார் 10 கிலோமீட்டர் விட்டமுடைய ஒரு பெரிய விண்கல் பூமியில் மோதியதன் காரணமாக அடுத்தடுத்து உண்டான இயற்கை மாற்றங்களாலும், காலநிலை மாற்றங்களாலும் டைனோசர்கள் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், இந்த விண்கல் மோதலில் டைனோசர் இனம் முழுமையாக அழிந்துவிடவில்லை என்றும், மெக்சிகோவின் யூகாடான் தீபகற்பத்தின் கீழே ஒரு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, டைனோசர்கள் அழிவுக்கு கூடுதல் காரணமாக அமைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.