மின்சாரம் தாக்கி நெல்லை கல்லூரி மாணவரும், அவரது தந்தையும் இறந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்திற்கு 26 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி தனது தந்தையும் சகோதரரும் உயிரிழந்த நிலையில், இழப்பீடாக தலா 20 லட்சம் வழங்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது, மின் கம்பி அறுந்து வேலியில் தொங்கியிருக்கிறது. இதை கவனிக்காமல், மின்வயரைத் தொட்டதும் மின்சாரம் தாக்கியது. இதனை அறிந்த எனது தந்தை மற்றும் சகோதரர் என்னை காப்பாற்ற முற்பட்டபோது, நான் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பினேன். ஆனால் எதிர்பாராத விதமாக எனது தந்தை மற்றும் சகோதரரும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர். எனவே மின்வாரிய அலட்சியத்தால், மின்சாரம் தாக்கி உயிரிழந்த, எனது தந்தை மற்றும் சகோதரருக்கு இழப்பீடாக தலா இருபது லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், “மின் கம்பி அறுந்து வேலியில் பட்டதன் காரணமாகவே, மின்சாரம் தாக்கி மனுதாரரின் தந்தையும், சகோதரரும் உயிரிழந்தது உறுதியாகிறது. மின்கம்பி அறுந்து தொங்கும் வேளையில் மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும். ஆனால் இந்த நிகழ்வில் அதுபோல மின் இணைப்பு, துண்டிக்கப்படவில்லை. எனவே மின்வாரியத்தின் அலட்சியப்போக்கின் காரணமாகவும், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலுமே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதற்கு மின்வாரியமே பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, மனுதாரரின் குடும்பத்தினருக்கு, 26 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை மனுதாரரின் தந்தையும், சகோதரரும் இறந்த வருடத்தில் இருந்து கணக்கிட்டு 6% சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM