சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இன்று தனது 70வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி னார். இதையடுத்து, அவர் தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்து நன்றி தெரிவித்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சரத்குமார் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகரும், சமக தலைவர் சரத்குமார் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில், வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இந்த அன்பு தம்பி வேண்டிக்கொள்கின்றேன். மீண்டும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கட்சியின் தலைமையகமான கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு குவிந்திருந்த கட்சி தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். வெள்ளை சட்டை பேண்ட் கறுப்பு கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் அவருடன், மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன், சண்முகபாண்டியன்உடன் இருந்தனர்.
விஜயகாந்தை நேரில் சந்தித்த உற்சாகத்தில் பலரும் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, கட்சி தொண்டர்களுக்க விருந்து வழங்கப்பட்டது. விஜயகாந்த் நேரில் சந்தித்து விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றது தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.