வைகோ 56: துரை வைகோ எடுக்கும் முக்கிய முன்னெடுப்பு!

வைகோ பொதுவாழ்வில் அடியெடுத்து 56 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் முக்கியமானவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டு களத்துக்கு வந்தவர். திமுகவில் இருந்தபோதும் மதிமுகவை தொடங்கிய பின்னரும் தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ் ஈழ மக்கள் நலனுக்காக தொடர்ந்து பேசி வருகிறார்.

மேடைகளில் கருப்பு துண்டை சரி செய்துகொண்டே அவர் பேசும் பேச்சுக்கு கட்சி தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக வைகோ தற்போது அதிகமாக பொது மேடைகளில் பேசுவதில்லை. கட்சிப் பணிகளையும் அவர் மகன் துரை வைகோவே தற்போது கவனித்து வருகிறார்.

இன்றைய இளைய சமூகத்துக்கு வைகோவின் அர்ப்பணிப்பு, உழைப்பு குறித்து பெரியளவில் தெரிய வாய்ப்பில்லை. வைகோ பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு திரையிடும் பணிகளில் துரை வைகோ ஈடுபட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஆவணப்படத்தை வெளியிட உள்ளார். அதிமுக, பாஜக தவிர அனைத்துக் கட்சி தலைவர்களையும் இந்த நிகழ்வுக்கு அழைக்க துரை வைகோ திட்டமிட்டுள்ளார்.

நேற்று இதற்கான அழைப்பிதழை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் துரை வைகோ வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்ஜிஆரைபோல் வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல மனிதர். அவர் பூரண குணமடைந்து எழுச்சியுடன் தமிழக அரசியலில் வலம்வர வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பொது வாழ்வு குறித்த ஆவணப் படத்தை வெளியிட இருக்கிறோம். இது வைகோவின் 56 ஆண்டு கால சாதனைகள், தியாகங்களை உள்ளடக்கிய 75 நிமிட ஆவணப் படம். இதை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய ஒன்றாக இதை செய்துள்ளேன். இந்த படத்தில் யாரையும் தாக்கிப் பேசவில்லை. இதற்கான அழைப்பிதழை தேமுதிக நிர்வாகிகளிடம் வழங்கினோம்.

அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்றுள்ள அரசியல் சூழலை பொறுத்தவரை சனாதன சக்திகள் திராவிட கொள்கைளைத் தாண்டி வேரூன்றும் முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிமுக, பாஜகவை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. ஒன்றாகவே பார்க்கிறோம். அதே நேரம் அரசியல் தவிர்த்து நண்பார்களாகவே இருக்கிறோம். அதிமுகவிலும் வைகோவை மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.