இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பல வகைகளில் பணப் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் ஆந்திராவில் நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு வாட்ஸ் அப்பில் புது எண்ணிலிருந்து ஒரு லிங்க் வந்திருக்கிறது. எதோ புது எண்ணிலிருந்து லிங்க் வந்ததால், ஆர்வத்துடன் அந்த லிங்கை இவர் க்ளிக் செய்து பார்த்திருக்கிறார்.
அந்த லிங்க்கை அவர் க்ளிக்செய்த அடுத்த சில நிமிடங்களில் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வர தொடங்கியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வரலக்ஷி உடனடியாக போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்அப்பில் வந்த மோசடி லிங்கை க்ளிக் செய்ததையடுத்து, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.21 லட்சம் பறிபோனதை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவருடைய வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், அந்த வாட்ஸ்அப் எண் மூலம் குற்றவாளியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.