சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள். இவருக்கு வயது 74 ஆகும். இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இவர் தனது தந்தை இறப்புக்கு கூட வரவில்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து சடங்கிற்கு தான் வந்தான்.
சடங்கு முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளான். எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தனிமையில் தவிக்க விட்டுள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரின் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் தன் மீது புகார் அளித்த தகவல் ராமகிருஷ்ணனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தனது வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துர்காம்பாள் அளித்த புகார் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 22 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவரது பெயரில் மயிலாப்பூர் போலீசார் ‘லூக் அவுட்’ இருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.