இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த M.V X-Press Pearl கப்பலில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னார் முதல் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான கடற்கரையை சுத்தப்படுத்த இதுவரை 93.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என கடல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, செத்சிறிபாய வில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து வெளியாகும் 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் முத்துக்கள் (Nurtles ) மற்றும் இரசாயனங்கள் என்பனவற்றை பமுனுகம பிரதேசத்தில் வாடகைக்கு பெறப்பட்ட களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசனையின் அடிப்படையில் கழிவுகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி ,கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 nm தொலைவில் வைத்து கப்பலில் உள்ள ஒரு கொள்கலனில் இருந்து ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக கப்பலில் தீ பிடித்தது. இத் தீ ஜூன் 2 வரை (சுமார் 13 நாட்கள்) எரிந்து இறுதியில் சரக்குகளுடன் கப்பல் முழுமையாக மூழ்கியது.
குறித்த கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட MV X-Press Pearl கன்டெய்னர் அடங்கிய கப்பல் ஆகும்.இதில் அபாயகரமான இரசாயன சரக்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பாணந்துறையில் இருந்து நீர்கொழும்பு (மா ஓயா) வரையிலான மீன்பிடி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..