வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்.
இந்த திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ரவி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் மேலானது.
திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழக கவர்னராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது. அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பு தான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு. ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகளில் ஆதிபகவன் என்பதையே தவிர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement