பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் 37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப நிலை உயர்வின் காரணமாக சீனாவின் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதிலும் கடந்த ஒரு மாதமாக சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், முக்கிய நீர்நிலைகள் கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டன.
சீனாவில் வெப்ப அலை
குறிப்பாக தென்மேற்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் யாங்சே டெல்டா பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான யாங்கே நதியில் கூட தற்போது தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான இந்த நதியிலும் தண்ணீர் குறைந்துள்ளதால், அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சீனா அரசு தீவிர யோசனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வறட்சியை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
66 ஆறுகள் வறண்டுவிட்டன
மேலும் பருவ நிலை மாறுபாடே இத்தகைய வெப்ப நிலைக்கு காரணம் என்று குறைகூறும் சீன அதிகாரிகள், வறட்சியால் சீனாவின் பல பில்லியன்கள் மதிப்பில் இழப்பும் ஏற்படுவதாக கூறுகிறது. சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான சோங்கிங்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள 34 கவுண்டிகளில் உள்ள 66 ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. நடப்பு ஆண்டு 60 சதவீதம் அளவுக்கு மழை பொய்த்ததே இந்த வறட்சிக்கு காரணம் என்று அங்குள்ள அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். அதீத வெப்பத்தால் சோங்கிங் பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் சில இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
இதுமட்டுமல்லாமல் இந்த மாகாணத்தில் அதீத வெப்பம் காரணமாக உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் பலத்த மழை பெய்து வரும் நிலையில் மற்றொரு புறம் தாங்க முடியாத வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் தெற்கு பகுதியில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மிகவும் குளிர்ச்சி நிறைந்த பகுதியாக அறியப்படும் திபெத்திய பீடபூமியிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி சூழலை எதிர்கொண்டுள்ளது.
370 மில்லியன் மக்கள் பாதிப்பு
வறட்சியால் யாங்சே நதிப் படுகை மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கடலோர மாகாணமான ஷாங்காயில் இருந்து சிச்சுவான் மாகாணம் வரை கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சோங்கிங் நகரம் மற்றும் சிச்சுவான், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் மாகாணங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் மேலே வெப்பம் நீடிக்கும் என்றும், இந்த நிலைமை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
வறட்சியால் விளைச்சல் குறைந்து கடும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்காக 10 பில்லியன் யுவன் நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, 95 சதவீதம் தானே உற்பத்தி செய்து வந்தது. தற்போது வறட்சி அதிகரிப்பால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா போரால் சர்வதேச விநியோகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள வறட்சி கூடுதல் நெருக்கடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
மின் உற்பத்தி பாதிப்பு
சிச்சுவான் மற்றும் சோங்கிங் பகுதிகளில் குடிநீர்தேவைக்காவும், விவசாய தேவைக்காகவும் லாரிகளில் கொண்டு வந்து குடிநீர் விநியோகிக்கும் காட்சிகள் சீன அரசு ஊடகத்தில் வெளியானது. சீனாவின் பல மாகாணங்களில் 45 டிகிரி செல்சியை வெப்ப நிலை தாண்டியுள்ளது. மின்சார தேவை அதிகரித்துள்ளதால், சில இடங்களில் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. யாங்சே ஆற்றில் இதுவரை இல்லாத அளவு நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தியும் குறைந்துள்ளது.