கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், கட்சி தலைமையில் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.
யூகங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டார்!
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பொதுக்குழு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாவும், யூகங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளாதாகவும், அதிகாரம் பெற்றவர்களால் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதும் தவறானது என்றும் கூறி வாதத்தை தொடங்கினார்.
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிரான தன நீதிபதி உத்தரவு உள்ளதாகவும், கட்சியினர் ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கோரியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா எனவும் தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் ஈ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
அது ஒரு நபர் பயனடையும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு!
தனி நீதிபதியின் உத்தரவு தனி ஒரு நபர் பயனடையும் வகையில் தான் உள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டார். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜூன் 23ம் தேதி, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டு வர 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து ஈ.பி.எஸ்-ஐ இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்குத் தான்!
மேலும், கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை என கூற முடியாது என்றும், அப்படிப்பட்ட வாதம் ஏதும் மனுதாரர்களால், தனி நீதிபதி முன்பாக முன்வைக்கப்படவில்லை என வாதிட்டார். குறிப்பாக ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படவில்லை என்றும், அவ்வாறு கோரப்படாத நிவாரணத்தை வழங்கியது அசாதாரணமான உத்தரவு என்றும் சுட்டிக்காட்டினார்.
செயல்பட முடியாத நிலையில் அதிமுக உள்ளது!?
ஜூலை 11ல் பொதுக்குழு நடக்கும் என ஜூன் 23ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதை ஓ.பி.எஸ். தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2539 பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளதாகவும், கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது என்பதால், அதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட ஓ.பி.எஸ். மறுத்ததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் வேட்பாளர்கள் தோல்வியடைந்ததாகவும் ஓ.பி.எஸ். மீது குற்றம்சாட்டப்பட்டது.
உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டுள்ளார் நீதிபதி!
பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கட்சி விதிகளில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்ததுடன், உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையிலும், வழக்கு கோரிக்கையை மீறி பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஈ.பி.எஸ். தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன் வாதத்தை நிறைவு செய்தார்.
பொதுக்குழு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்!
அதன்பின்னர் ஈ.பி.எஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், அதிமுக-வில் நிர்வாகம் குறித்த முடிவுகளை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் பெற்ற அமைப்பான பொதுக்குழுவில் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், கட்சியினர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி கூறுகிறார், ஆனால் முடிவு எடுக்க அதிகாரமில்லை என்பதால், அவர்களை பொதுக்குழுவுக்கு அழைப்பதில்லை என்பதை என்பதை புரிந்துகொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்ற காரணத்துக்காகவே அதை ரத்து செய்யலாம் என வாதிட்டார்.
ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இனி இணைந்து செயல்பட முடியாது!
கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவது இனி நடக்காது என்பதாலும், தனி நீதிபதியின் உத்தரவாலும், கட்சி செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால்தான் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் ஓபிஎஸ் வழக்கு தொடந்துள்ளதாகவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் உரிமை ஏதும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
கட்சிக்கு ஈடுசெய்ய இயலா இழப்பை ஏற்படுத்திய நீதிபதியின் உத்தரவு!
இருவரும் செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வாதிட்டார்.
கூட்டம் நடத்தக் கூடாது என ஒபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது என்பதாலும், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டி வரும் என்பதால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வாதங்களை நிறைவு செய்தார்.
ஈ.பி.எஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை கூட்டுவதற்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கவில்லை என்பது தவறு என்றும், ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அதற்கான அறிவிப்பை வெளியிட்டதை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததாக கருத வேண்டும் என தெரிவித்தார். ஜூலை 11 பொதுக்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவற்றை எதிர்த்து வழக்குகள் ஏதும் தொடரப்படவில்லை என்றும் வாதங்களை நிறைவு செய்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM