கீவ்: உக்ரைனின் சுதந்திரத் தினமான நேற்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். 31-வது உக்ரைன் சுதந்திர தின விழா நேற்று எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கொண்டாடப்பட்ட நிலையில், ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து கீவ் நகர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “நேற்று சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அப்போது சாப்லின் நகரில் ரஷ்ய பாதுகாப்புப் படை இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்போது நகரின் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது” என்றனர்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, “உக்ரைனில் பொதுமக்கள் பயணித்த ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 22 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உலகின் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து உக்ரைனுக்கு நாங்கள் துணை நிற்போம்” என்றார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. குடிமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் ஒருபடி முன்னோக்கி இருப்பதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6 மாதங்களுக்கு மேலாக நடக்கும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.