புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் சிலமாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தாத 3 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 34 மாணவர்களை கடந்த 22-ம் தேதி பள்ளி நிர்வாகம் நூலகத்தில் வைத்து பூட்டியதாகக் கூறப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 2.30 மணி வரை மாணவர்கள் அறைக்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ), துணை முதல்வர் மற்றும் நிர்வாக மேலாளர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 342, சிறார் நீதி சட்டத்தின் 75-வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புவனேஸ்வர் காவல் துறை துணை ஆணையர் பிரதீக் சிங் கூறும்போது, “பெற்றோரின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உள்ளோம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் வகுப்பு ஆசிரியர்கள், நூலகர் மற்றும் நிர்வாக மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சந்தியாபதி பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.