பூரி: இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பூரி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இதனால் பல ஆயிரம் பேர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். பூரியில் உள்ள பிப்லி தாலுக்காவில் எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. மக்கள் பொது இடத்தில் சமையல் செய்து சாப்பிடுகின்றனர். போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன.
கால்நடைகளும் தீவனம் கிடைக்காமல் பாதிப்பை சந்தித்துள்ளன. பூரி மாவட்டத்தில் 10 தாலுக்காக்கள் மழை, வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. 2 வாரங்களாக ஒடிசாவின் சம்பல்பூர், சுந்தர்கர், மயிர்பஞ்ச் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. இதனால் மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உலகின் மிகநீளமான அணையான ஹிராகோட் அணை நிரம்பியது. ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, செப்டம்பர் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கின்றது. இதனால் ஒடிசாவில் மழை பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.