100 அடி ரோடு முதல் அரும்பார்த்தபுரம் வரை முடங்கிய புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது; ரூ.26 கோடியில் விரைவில் பணிகள் துவக்கம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருப்பினும், நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நகரப்பகுதி முதல் கிராமம் வரை பெரும்பாலான இடங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் குறுகியதாக உள்ளது. இதனால் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, உப்பளம் சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் சாலை என முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இந்திரா காந்தி சிலை முதல் ரெட்டியார்பாளையம் வழியாக உழவர்கரை, மூலக்குளம், வில்லியனூர், விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு விபத்துகள் நடந்து வருகிறது.

சமீபத்தில் 7 வயது  சிறுவன் தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட விபத்துக்கள் 25க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இச்சாலையில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதுவை அரசு தொலைநோக்கு பார்வையுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நூறடி சாலை ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரிலிருந்து அரும்பார்த்தபுரம் மேம்பாலம் வழியாக வில்லியனூர் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. 1996ம் ஆண்டு முதற்கட்டமாக 100 அடி அகலத்தில் புறவழிச் சாலை அமைக்க நில ஆர்ஜிதம் செய்ய நோட்டீஸ் அனுப்பினர்.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 1998ம் ஆண்டு 100 அடி சாலை அகலத்தை 60 அடி சாலையாக மாற்றி மீண்டும் நில ஆர்ஜித நோட்டீஸ் அனுப்பினர். அப்போது ஜி.எல்.ஆர்., மதிப்பு நகரப்பகுதியை விட கிராம பகுதியில் பல மடங்கு குறைவாக உள்ளதாக கூறி, விவசாயிகள் நில ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், 2001ல் புறவழிச் சாலையை மீண்டும் 100 அடியாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்படாமல் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு, நூறடி சாலை ஆர்.டி.ஓ., அலுவலகம் பகுதியில் இருந்து புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக முதலியார்பேட்டை நூறடி சாலை மேம்பாலம் அமைக்கும் போதே, அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலைக்கான இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது.

இந்த இணைப்பு சாலை அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு ஹட்கோ மூலம் ரூ.26  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 17ம் தேதி விடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு துவங்கப்படும். பணிகள் துவங்கிய ஓராண்டில் இந்த புறவழிச்சாலை திட்டம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதனால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.