தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள்.
இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் சாலை ஓரங்களில் கடை அமைத்து தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ தக்காளியை 250 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். ஓசூரில் இருந்து தக்காளி கன்றுகளை கொண்டு வந்து விவசாயம் செய்யப்படுகிறது. இந்த கன்றுகளை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலைகொடுத்து விவசாயிகள் வாங்குகின்றனர்.
தக்காளிகளை பறிப்பதற்கு தொழிலாளி ஒருவருக்கு ரூ.500 வரை கூலிகொடுக்கப்படுகிறது. ஆனால் வியாபாரிகள், தக்காளி விலையை மிகவும் குறைந்த விலைக்கே கேட்கிறார்கள். இதன் காரணமாக சாலைக்கு வந்து விவசாயிகள் நேரடியாக தக்காளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. மேலும் சின்ன வெங்காயம், வெண்டைக்காய் போன்றவற்றின் விலையும் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை குறைவு தங்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கச் செய்திருப்பதாகவும் அவர்கள் வேதனைதெரிவித்துள்ளனர்.