திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக சுட்டிக்காட்டியுள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டயபடிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துவருகிறது. இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளனர். எனது விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பின்வரும் நான்கு மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வரலாறு M.A(History) இறுதித் தேர்வு எழுதியுள்ளனர்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை இன்னும் அறிவிக்கவில்லை. அதனால் இந்த மாணவர்களுக்கும் தேர்வு முடிவு தெரியவில்லை. ஆனால் முதுநிலைப் பட்டயபடிப்பு சேர்வதற்கு இன்று (25.08.2022) மாலைக்குள் மதிப்பெண் சான்றிதழ் அளிக்க வேண்டும் இல்லையென்றால் இடம் வழங்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாணவர்களுக்குத் தகுதி இருந்தும் படிக்க இடம் கிடைக்காமல் போகும் இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக் கழக நிர்வாகம் இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு இந்த நான்கு மாணவர்களுக்கும் முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேருவதற்குச் சிறப்பு அனுமதி பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.