மும்பை வீதிகளில் இருக்கும் ஒரு ஏழைச் சிறுவன் எப்படிப் படிப்படியாக உயர்ந்து உலகின் முன்னணி MMA போட்டிகளில் பங்கேற்கிறான் என்பதுதான் ‘லைகர்’.
மும்பை மாநகரில் ஷாருக் கான், சல்மான் கானால் மட்டுமே கட்ட முடிந்த அளவுக்கு பார்ஷான ஒரு குட்டி இரும்புக் கொட்டகை அமைத்து, பீச் அருகே தன் தாயார் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்கிறார் விஜய் தேவரகொண்டா. மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா எப்படியாவது MMA என்கிற Mixed Martial Arts போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதுதான் ரம்யா கிருஷ்ணனின் ஆசை. அதற்கென ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கிறது. ஆனால், அந்த ஃபிளாஷ்பேக்கை எல்லாம் காட்சிகளாகக் காட்டி நம்மை மேலும் நோகடிக்க விரும்பாமல், வெறுமனே வசனங்களால் மட்டுமே சொல்லிவிட்டு நகர்கிறார்கள். பணம் அதிகம் தேவைப்படும் அந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ள ஒரு கோச்சிங் சென்டரில் சின்ன சின்ன வேலைகள் செய்கிறார் விஜய் தேவரகொண்டா. இதற்கிடையே அனன்யா பாண்டேவுடன் காதல்; அனன்யா பாண்டே அண்ணனுடன் மோதல் எனச் சம்பிரதாயக் காட்சிகளும் இணைந்துகொள்ள, இதுக்கு எல்லாமா இடைவேளை பிளாக் விடுவீர்கள் என்னும் ரீதியில், ஒரு இடைவேளை. அதற்கடுத்து படத்தில் வருவதெல்லாம் படக்குழுவினரால் மட்டுமே ஜீரணிக்க முடிந்த துன்பியல் கொத்து பரோட்டா சம்பவங்கள்.
விஜய் தேவரகொண்டா ஒரு சண்டை வீரருக்கான உடல்வாகை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார். அந்த உழைப்புக்கு வாழ்த்துகள். ஆனால், அதற்கான கதைத் தேர்வோ, காட்சி அமைப்புகளோ எதுவுமே படத்தில் இல்லை. அவருக்கு எதெல்லாம் பாசிட்டிவான விஷயங்களோ அதையெல்லாம் மெனக்கெட்டு எதிர்மறையாக்கி வைத்திருக்கிறார்கள். திக்கிப் பேசுபவர்களின் பிரச்னையை வைத்தே ஒரு முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார் பூரி. சரி, அவர்களுக்கான சிக்கலைப் பேசுவாரென்றால் அதுவுமில்லை. முதல் காட்சி தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அதை மிகப்பெரிய குறையாக பூதாகரப்படுத்தி, நக்கலுக்குள்ளாக்கி நமக்கும் மன உளைச்சலை உண்டாக்குகிறார். இத்தனை படங்கள் எடுத்த அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் குறைந்தபட்ச குற்றவுணர்வுகூட இல்லாமல் பேசுவதில் தடுமாற்றம் உடையவர்களைக் கிண்டலடிப்பது மிக மோசமான செயல். போதாக்குறைக்கு அதை விஜய் தேவரகொண்டாவும் ஓவர் ஆக்டிங் செய்து இன்னும் மோசமாக்குகிறார்.
`அர்ஜுன் ரெட்டி’ தொடங்கி இப்போதுவரை `பொண்ணுங்கன்னா ஆம்பளைங்களை ஏமாத்துவாங்க’ எனச் சளைக்காமல் பாடமெடுத்துக்கொண்டே இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதிலும் பெண்ணின் சட்டையைப் பிடிக்கிறார். `பொண்ணை நம்பித்தான் இப்படி’ என ஒப்பாரி வைக்கிறார். பேன் இந்தியா ஸ்டார் ஆகவேண்டுமென்கிற ஆசை எல்லாம் நியாயம்தான். இந்தியா முழுக்க நம்மை உற்றுநோக்கும் பட்சத்தில் அந்தப் பொறுப்பை உணர்ந்து கதைகளில், காட்சிகளில், வசனங்களில் கவனம் செலுத்த வேண்டாமா சாரே?
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பது அனன்யா பாண்டேவின் கனவு. ஆனால், அதற்கு அவர் எதுவுமே செய்வதில்லை. ஆனாலும், பிரபலமாகிவிடுகிறார். எதுவுமே செய்யாமல் படத்தை எடுத்தாலும் நன்றாக இருந்துவிடும் என நினைத்துவிட்டார்கள் போல! அனன்யா பாண்டேவிற்குக் கிடைத்த அந்த அதிர்ஷ்டம் கூட படக்குழுவுக்கு வாய்க்கவில்லை. அதிலும் அனன்யா பாண்டேவுக்கு தீர்க்கதரிசனமாய் ஒரு வசனமும் வைத்திருக்கிறார் பூரி. ‘நான் ஹாலிவுட்டுக்குப் போய் நடிப்பு கத்துக்கப்போறேன்’ என்கிறார் அனன்யா. கற்றுக்கொண்டால் அவருக்கும் நமக்கும் நலம்.
நாயகன், நாயகி கதாபாத்திரங்களில் இரு நடிகர்களும் சுத்தமாகப் பொருந்தவே இல்லை. இப்படிப் பொருந்தாக் கதையில், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் எல்லாம் ‘ஐயோ விட்டுடுங்க’ ரகம். ஜாக்கி சான் படத்திலிருந்து சில காட்சிகள், பின்னணி இசையில் ‘மிஷன் இம்பாஸிபிள்’ தொடங்கி ஏகப்பட்ட வெட்டி ஒட்டுதல்கள் என மொத்த டீமும் கடனே என்று வேலை பார்த்திருக்கிறது போல! வம்படியாய் மைக் டைசனை வேறு இழுத்துவந்து அவரின் ஃபர்னிச்சரையும் உடைத்திருக்கிறார்கள். விஜயகாந்த் படங்களில் அடி வாங்கவே வடக்கிலிருந்து ஆள் பிடித்து வருவது போல, நிஜ பாக்ஸிங் வீரரான மைக் டைசனை அடி வாங்க மட்டுமே கூட்டி வந்ததுதான் துன்பத்தின் உச்சம். அவரும் ஜாலியாக விஜய் தேவரகொண்டாவிடம் அடி வாங்குகிறார். நமக்குத்தான் பாவமாகவும், கடுப்பாகவும் இருக்கிறது.
ஏழை இளைஞன்/இளைஞி டு ஸ்போர்ட்ஸ் ஸ்டார் – இதுதான் கிட்டத்தட்ட எல்லா பாக்ஸிங் படங்களுக்குமான ஒன்லைன். அவ்வளவு ஏன் எல்லா ஸ்போர்ட்ஸ் படங்களுக்குமான ஒன்லைனும்கூட. சரி, நாம அப்ப என்ன புதுசா சொல்லலாம் என யோசித்திருக்கலாம். சரி, எதுக்கு புதுசா சொல்லிக்கிட்டு என்றுகூட யோசித்திருக்கலாம். ஆனால், எதையுமே யோசிக்காமல் ஏற்கெனவே பார்த்த பல படங்களின் துண்டு துண்டு காட்சிகளை அப்படியே வெட்டி ஒட்டி வைத்திருக்கிறார்கள். ‘லைகர்’ என்பது சிங்கத்துக்கும் புலிக்குமான கிராஸ் ப்ரீட். அப்படி இதில் லைகரின் தந்தை எப்படிப்பட்ட சிங்கம் என்பதற்கும் எந்தப் பின்கதையும் இல்லை, தாய் எப்படியாப்பட்ட புலி என்பதற்கும் எந்தவித பின்கதையும் இல்லை. ரம்யா கிருஷ்ணன் மட்டும் இன்னும் ராஜா மாதா சிவகாமி ஆன்மாவின் சக்தியாலே தன்னால் முடிந்த மட்டிலும் படத்தைக் காப்பாற்ற முயல்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் ‘நீங்க மட்டும் எப்படி ஸ்கோர் பண்ணலாம்?’ என அவருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களைக் கொடுத்து காலி செய்திருக்கிறார்கள்.
‘லைகர்’ என ஏன் விஜய் தேவரகொண்டாவுக்குப் பெயர்; அனன்யா பாண்டேவின் கதாபாத்திரம் ஏன் இப்படி எழுதப்பட்டிருக்கிறது; இதற்கு எதற்கு மைக் டைசன் என ஓராயிரம் கேள்விகள். படத்தில் விஜய் தேவரகொண்டா தவிர்த்து யாருமே குறைந்தபட்சம் கூட மெனக்கெடக் கூடாது என முடிவெடுத்துப் படமெடுத்திருப்பார்கள் போல!
பேன் இந்தியா திரைப்படங்கள் என்னும் பெயரில் கதையும் இல்லாமல் நேட்டிவிட்டியும் இல்லாமல் எந்தவித சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் இன்னும் எத்தனை படங்கள் நம்மைச் சோதிக்கக் காத்திருக்கின்றன என யாம் அறியோம் பராபரமே!