லக்னோ: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே உத்தரப் பிரதேச பாஜக தலைவராக பூபேந்திர சிங் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சட்டப்பேரவை கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார் பூபேந்திர சிங் சவுத்ரி. இவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினரின் வாக்குகளை தக்கவைப்பது பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும். இதைக் கருத்தில் கொண்டே பூபேந்திர சிங் சவுத்ரி மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னால் ஸ்வதந்திர தேவ் சிங் பாஜக தலைவராக இருந்தார். அவர் தெற்கு உத்தரப் பிரதேசத்தின் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவராக ராஜீவ் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய துணைத் தலைவர் சவுதான் சிங் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேவேந்திர சிங் ரானா இமாச்சலப் பிரதேச தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.