மதிமுகவினர் தொடுத்த வழக்கு… சீமான் விடுதலை

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே நேரத்தில் வந்தபோது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவந்தார்கள். அதேபோல காயம்பட்ட ம.தி.மு.க வினர் கொடுத்த புகாரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு வழக்கின் விசாரணையும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. இந்த இரு வழக்கும் கடந்த 18-ம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில் ம.தி.மு.க வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அவ்வழக்கு தொடர்புடைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.
இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதால் சீமான் உள்ளிட்டோரை அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சீமான், இதே மோதல் தொடர்பாக காவல் துறையினர் தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது. ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “இலவசங்களால் ஒரு தேசம் வளராது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். இது வாக்கை பறிப்பதற்கான வெற்று கவர்ச்சி திட்டம்.
கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதனை கடன் வாங்கி படிக்க வேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. வேளாண் குடிமக்கள் கடனாளியாவதற்கான காரணத்தை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். விவசாயிகள் மென்மேலும் கடன் வழங்குகிறார்கள். இலவசங்களை கொடுப்பதற்கான பணத்தை எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. இலவசங்களை கொடுப்பதை எதிர்க்கும் பாஜக வேளாண் குடிமக்களுக்கு ஏன் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்? எனவே இதுவும் ஒரு ஏமாற்று வேலை. வேளாண் குடிமக்கள் கையேந்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?.
image
பஸ் பாஸ், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாக பெறும் மாணவர்கள், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தான் கல்வி கற்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களை அரசே தான் ஊக்குவிக்கிறது. கல்வி தரத்தை உயர்த்தியதால், கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் இங்கு தனியார் பள்ளிகள் தரம் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரம் உயரவில்லை. மற்ற நாடுகளில் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் அது நன்றாக இல்லை.
திருடன் தான் மற்றவர்களை பார்த்து திருடன் என்பார். அதுபோல உண்மையான சங்கிகள், மற்றவர்களை பார்த்து சங்கி சங்கி எனக் கூறுகிறார்கள். அந்த வகையில் தான், என்னை சங்கி என்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பிரதமரை நலத்திட்ட விழாவிற்கு கூப்பிடுவதில்லை. ஆனால் தமிழக முதல்வர் கூப்பிடுகிறார். எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது. பள்ளிக் கல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும்.
முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5,000 பேர் முதலில் திரட்டட்டும். அதன்பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள், ஏன் மீண்டும் திமுகவில் இணைந்தார்கள் என தெரியவில்லை. நமக்கு நாமே திட்டம் என்பது சரிதான். ஆனால் இது அமைச்சர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். ஆனால் மக்களுக்கு ‘நாமமே’.
image
லிம்கா நிறுவனத்திற்கும், ராஜபக்சே குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனம் முறையாக பணம் செலுத்தி படத்தை வாங்கி அதை வெளியிடுகிறார்கள். ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவரமுடியாமல் இருக்கும் பல படங்கள் வெளி வந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பது தவறு. அவர் அதில் நடிக்க கூடாது. சூது எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்பது என்பது முதல் குடிமகன் என்ற அடிப்படையில் முதலில் முதலமைச்சர் அவரின் கருத்தை கூறட்டும். அதன்பிறகு மக்களின் கருத்தை கேட்கட்டும். மக்கள் கருத்தை விட மக்கள் நலனே முக்கியம் அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். கருத்து கேட்டால் பல கருத்துகள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.