பெங்களூரு: கர்நாடகாவில் சுதந்தின தினத்தன்று பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, சாவர்க்கரின் படம் இடம் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டது. ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சாவர்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக சார்பில் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சாவர்க்கர் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசூருவில் சாவர்க்கர் ரத யாத்திரையை முன்னாள் முதல்வர் எடியூரப்பா காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சாவர்க்கர் படத்தால் அலங்கரிங்கப்பட்ட வாகனம் சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்றது.
இதுகுறித்து எடியூரப்பா கூறு கையில், ‘‘ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய சாவர்க்கரை அவமதிக்கும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மக்களுக்கு சாவர்க்கரின் வரலாறை போதிக்கும் வகையில் சாவர்க்கர் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில் உரை நிகழ்ச்சிகள், பாடல், நாடகம் போன்றவையும் இடம்பெறும்” என்றார். இந்நிலையில் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடகா முழுவதும் சாவர்க்கர், பால கங்காதர திலகர் ஆகியோரின் படங்கள் வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சாவர்க்கர் ரத யாத்திரைக்கு காங்கிரஸாரும் முஸ்லிம் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு ஆகிய மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.