களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் நாசம்

களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் பம்பன்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் நாலாபுறமும் இருந்து விளைநிலங்களுக்குள் படையெடுத்ததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர். அதற்குள் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை நாசம் செய்தன. பன்றிகள் அட்டகாசத்தால் 400க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இவைகள் 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும்.

பன்றிகள் சேதப்படுத்திய வாழைகள் மேலவடகரையை சேர்ந்த முருகபெருமாள் (40), அய்யா (40), பண்டாரம் (45), பாண்டி (30), நம்பிநாராயணன் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். வாழைகளுக்கு உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து பாதுகாத்து வந்த நிலையில் நொடி பொழுதில் பன்றிகள் வாழைகளை துவம்சம் செய்ததால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எ

னவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வரும் வேளையில் காட்டு பன்றிகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

வனத்துறை பாராமுகம்: களக்காடு மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. வனத்துறையினரிடம் மனு கொடுத்தும், அவர்கள் இழப்பீடும் வழங்காமல், வனவிலங்குகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருந்து வருவதாக களக்காடு பாஜ பிரமுகர் சேர்மன்துரை புகார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.