திண்டுக்கல்: ஆயக்குடி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் கிழக்கு ஆயக்குடி கிராமப்பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கெய்யா, மா, தென்னை, வாழை. எலுமிச்சை மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம்.
சில தினங்களாக சுமார் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் எங்களது பகுதி விளைநிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, ஆட்களை விரட்டி வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு எங்களின் நிலங்களில் உள்ள விளைபொருட்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் தோட்டத்திலேயே அழிந்து நாசமாகி வருகிறது. மேலும் எங்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எங்கள் பகுதியில் உள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது யானைகளை முதுமலை சரணாலயத்திற்க்கு கொண்டு செல்லவோ விரைவாக நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.