புதுடெல்லி: தேர்தல் நேரத்து இலவசங்களைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘‘தேர்தல் நேரத்து இலவசங்கள் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையமோ அல்லது குழுவோ அமைப்பதாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்தால், முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்க வேண்டும்’’ என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத் தனர்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘‘தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள் மட்டுமின்றி, தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் இலவச அறிவிப்புகள் குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்படும் இலவச விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்தக் குழப்பமும் வராது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அரசு அமைந்த பின்னர் அறிவிக்கப்படும் இலவசம் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது என்பது சிக்கலான விவகாரம் மட்டுமல்ல. அது அபாயகரமானதும் கூட’’ என்றார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘தேர்தல் நேர இலவசங்களை ஆய்வு செய்ய ஆணையம் அல்லது குழு அமைத்தாலும் அதையும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பர். இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்ட ஆழமான நீண்ட விவாதம் தேவை’’ என்றார்.
பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு
அப்போது தலைமை நீதிபதி, ‘‘இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்க ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுபோன்ற இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், இது ஒரு தீவிரமான விவகாரம். ஏனெனில், இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வரலாம். அவ்வாறு வருபவர்கள் இலவசங்களையும் நிர்வகிக்க வேண்டும்.
பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய இலவச அறிவிப்புகள் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். எனவே இதுதொடர்பாக ஆய்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கலாம். அல்லது அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி ஒரு முடிவை எட்டலாம்’’ என யோசனை தெரிவித்தார்.
மேலும், ‘‘ஆடம்பர இலவச அறிவிப்புகள் என்பது ஒரு தீவிர பிரச்சினை. இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’’ என்றார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இலவச அறிவிப்புகளை சில அரசியல் கட்சிகள் அடிப்படை உரிமை எனக்கோருகின்றன. இலவச அறிவிப்புகள் பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இலவசம் என்ற ஒரு அறிவிப்பைவைத்தே அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முற்படுகின்றன’’ என்றார்.
அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு,‘‘இதுதொடர்பாக விரிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டியது அவசியம். எனவே இந்த வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுகிறோம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.