சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை பறிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இச்சூழலில், கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்தது. இந்த விவகாரத்தில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை ஜார்கண்ட் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பரிந்துரையின் மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று பெரும் குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே ஜார்க்கண்ட் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று குரலெழுப்பி உள்ளது பாஜக. இது தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில், தார்மீக அடிப்படையில் ஹேமந்த் சோரன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஜார்க்கண்ட் சட்டசபை கலைக்கப்பட வேண்டும். மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். இதனால் ஜார்கண்ட் மாநில அரசியல் களத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 81 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30, காங்கிரஸ் கட்சிக்கு 18, ராஷ்டிரிய ஜனா தளம், சி.பி.ஐ.எம்.எல். கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏ உள்ளனர். பாஜவுக்கு 26, அதன் கூட்டணி கட்சிகளுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் AK-47 துப்பாக்கிகள் பறிமுதல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM