தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து அறிவிக்கக்கூடாது என வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில அரசுகள் தம் மாநில மக்களுக்கு ‘விலையில்லா பொருட்களை’ அளிப்பது சரியா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
அரசியல் கட்சிகள் தேர்தலின்போது, இலவசங்கள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தரலாமா என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நீதிமன்றங்களில், தொலைக்காட்சிகளில், அரசியல் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. மக்களுக்கு விலையில்லாமல் பொருட்களை வழங்குவது என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ள ஒரு விஷயம். ஆனால், இப்போது ஏன் இந்த விவகாரம் விவாதிக்கப்படுகிறது என்ற கேள்விக்கான பதில் சுவாரஸ்யமானது.
இலவசங்கள் குறித்த விவாதம் எழுந்தது எப்படி?
கடந்த ஜூலை 16ஆம் தேதி புந்தேல்கண்ட் அதிவேக விரைவுச் சாலையைத் துவக்கிவைத்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இளைஞர்கள் ‘ரேவரி கலாசாரத்தில்’ ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது என்றார். ரேவரி என்பது வட இந்தியாவில் விழாக்காலங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு இனிப்பு வகை. “இப்போது நம்முடைய நாட்டில் ரேவரிகளைக் கொடுத்து வாக்குகளை வளைக்கும் கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டார். மக்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்குவது என்பதையே அவர் ‘ரேவரி கலாசாரம்’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொது நல மனு ஒன்றை விசாரித்தது. சாத்தியமில்லாத இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து தேர்தல் நடைமுறைகளையே அரசியல் கட்சிகள் குலைப்பதாக மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி, திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டன.
- “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும்”
- திமுக பற்றி நீதிபதி ரமணா கூறிய விமர்சனம் என்ன? இலவசங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
- பிடிஆர் சொல்லும் தமிழக நிதி பற்றிய புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு சரி?
ஆகஸ்ட் மூன்றாம் தேதி இந்த வழக்கின் விசாரணை வந்தபோது உயர் நீதிமன்றம் சில கருத்துக்களைத் தெரிவித்தது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டுமென சில அரசியல் கட்சிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தபோது, “இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இலவசங்களை நீக்க விரும்பாது என்பதால் இது குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த முடியாது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
உணர்வுரீதியாக இந்த விஷயத்தைப் பார்க்காதவர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்து இலவசங்கள் குறித்து ஆராயலாம் என்று கூறியது நீதிமன்றம். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இலவசங்கள் மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக வாதிட்டார்.
மாநில அரசு மக்களுக்கு இலவசமாக பொருட்களைக் கொடுப்பது சரியா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இந்திய அரசியல் களத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை விவாதம் எழுந்தது ஆம் ஆத்மி கட்சியை முன்வைத்துத்தான்.
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இந்தத் தேர்தலை மிக முக்கியமான தேர்தலாகக் கருதுகின்றன. இந்த நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், தாங்கள் குஜராத்தில் வெற்றிபெற்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாகத் தரப்படும் என்றும் 2021 டிசம்பர் 31 பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருந்தால், அவை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
அதுமட்டுமன்றி, இலவசங்கள் வழங்குவதை ‘ரேவரி கலாசாரம்’ என்று குறிப்பிட்ட பிரதமரையும் அந்த செய்தியாளர் சந்திப்பில் குத்திக்காட்டினார் அரவிந்த் கேஜ்ரிவால். “சிலர் ரேவரியைப் பற்றிப் பேசுகிறார்கள். ரேவரியை மக்களிடம் வழங்கும்போது அதனைப் பிரசாதம் என்று குறிப்பிட வேண்டும். ஆனால், உங்கள் நண்பர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீங்கள் இலவசமாகக் கொடுக்கும்போது அதனைப் பாவம் என்று சொல்ல வேண்டும்” என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.
பஞ்சாப் மாநிலத் தேர்தல்கள் நடந்தபோது, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றியை, அதன் தேர்தல் வாக்குறுதிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே பல அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த நிலையில், குஜராத் மாநிலத்திலும் இதுபோன்ற வாக்குறுதிகளை அந்தக் கட்சி முன்வைத்திருப்பது பா.ஜ.கவை அதிரவைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இலவசங்கள் தொடர்பான விவாதத்தை பா.ஜ.க. துவக்கிவைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் செயல்படும் விலையில்லா திட்டங்கள்
- தமிழ்நாட்டில் தற்போது மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் விலையில்லாப் பொருட்களும் சேவைகளும் அளிக்கப்பட்டுவருகின்றன. துவக்கத்தில் இந்தத் திட்டங்கள் இலவசத் திட்டங்கள் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு கட்டத்தில் விலையில்லாத் திட்டங்கள் என்று அவை அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற விலையில்லாத் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.
- 1967 முதல் 71 வரையிலான ஆட்சிக் காலத்தில் இலவச கண் சிகிச்சை அளித்து கண் கண்ணாடி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டு, அந்த ரிக்ஷாக்களை இழுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்டது.
- தற்போது இந்தியா முழுவதும் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டின் சென்னையில், நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் சிறிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. பிறகு 1982ல் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 1989ல் இருந்து இந்தத் திட்டத்தில் முட்டையும் வழங்கப்பட்டது.
- இதற்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கு பாடப்புத்தங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுவருகின்றன. இது தவிர, மாணவர்களுக்கான சீருடை, பேருந்தில் இலவசப் பயணம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.
- மேலும், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
- தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல், பொது விநியோகத் திட்டத்தில் அரிசியைப் பெறும் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மாதம்தோறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 கிலோ முதல் 20 கிலோவரை அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டுவருகிறது. ஒரு கோடியே 83 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இந்த அரிசி திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. அதற்கு முன்பாக, 2008ஆம் ஆண்டு முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விலையில் தரப்பட்டு வந்தது. 2008ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு தரப்பட்டது.
- தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் ஐந்து குதிரைத் திறன் கொண்ட விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் துவங்கிவைக்கப்பட்டு, தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. முதற்கட்டமாக 16,00,000 விவசாயிகளுக்கு இந்த இணைப்புகள் வழங்கப்பட்டன. 1991ல் இந்தத் திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முயன்றது. ஆனால், பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
- 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த ஏழு ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை முழுவதுமாக ரத்து செய்தது.
- அதே ஆண்டில், டிவி இல்லாத வீடுகளுக்கு விலையில்லாத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவங்கிவைத்தது. ஐந்தாண்டு கால ஆட்சி முடிவதற்குள் ஒரு கோடியே 64 லட்சம் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்தத் திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். அறிமுகப்படுத்தப் பட்டபோதே, இது ஒரு முறை மட்டும் வழங்கப்படும் திட்டமாகவே அறிவிக்கப்பட்டது.
- 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி இலவசமாக கிரைண்டர், மிக்சி, மின் விசிறி ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டமும் பயனாளர்களுக்கு ஒரு முறை பொருட்களை விலையில்லாமல் வழங்கும் திட்டமே.
- ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திட்டம் 1989ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டது. முதலில் 5,000 ரூபாய் வழங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான தொகை 2009ல் 25,000ஆக உயர்த்தப்பட்டது. 2011ல் இந்தத் தொகை ஐம்பதாயிரமாக உயர்த்தப்பட்டது. 2016ல் இந்தத் திட்டத்தில் 50,000 ரூபாயோடு சேர்ந்து எட்டு கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது இந்தத் திட்டத்தை ரத்து செய்து பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது.
- 2016ஆம் ஆண்டிலிருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைப் பொறுத்தவரை முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் சாதாரண நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கான பயணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.
இலவசத் திட்டங்களா, மக்கள் நலத் திட்டங்களா?
விலையில்லாப் பொருட்கள் வழங்குவதை சம்பந்தப்பட்ட கட்சிகள் மக்கள் நலத் திட்டங்களாக முன்னிறுத்துகின்றன. அந்தக் கருத்தை ஏற்காதவர்கள் அவற்றை தேவையற்ற இலவசங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இலவசங்கள் குறித்த விவாதம் துவங்கியது 2006ஆம் ஆண்டு தேர்தலில்தான். இந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலமும் வழங்கப்படுமென தி.மு.க. அறிவித்தது. அதேபோல, பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ 3.50 என்ற விலைக்கு வழங்கப்படும் அரிசி, 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளிவந்தபோது, தமிழ்நாட்டில் விலையில்லாப் பொருட்கள் குறித்த விவாதம் எழுந்தது. குறிப்பாக, தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாகத் தரப்பட வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் குறித்து The Dravidian Years நூலை எழுதியவரும் மத்திய அரசின் முன்னாள் நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலருமன் எஸ். நாராயண், இந்த காலகட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.
“நலத் திட்டங்கள், சமூகநீதி, அதிகாரமளித்தல், வாய்ப்புகளை அளிக்கும் கொள்கை ஆகியவற்றிலிருந்து விலகுவதை இந்த காலகட்டம் சுட்டிக்காட்டுகிறது. மனம்போன போக்கில், அரசு நிதியிலிருந்து இலவசங்களை வழங்குவதாக உறுதியளிப்பது அப்போதுதான் துவங்கியது. இதில் திராவிடத் திட்டம் ஏதும் இல்லை. தவிர, பலவீனமான பிரிவினரை குறிவைத்தும் இவை அறிவிக்கப்படவில்லை. இந்த இலவசப் பொருட்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டன. நிறைவேற்றவே முடியாத திட்டமான, நிலமற்றோருக்கு நிலம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை ஆட்சிக்கு வருவதற்கான கடைசி வாய்ப்பாக மு. கருணாநிதி கருதினார்” என Dravidian Years நூலில் குறிப்பிடுகிறார் நாராயண்.
2011ல் ஜெயலலிதாவின் முறை வந்தபோது, முதலில் களத்தில் இறங்கி வாக்குறுதிகளை வாரி வழங்க ஆரம்பித்தார் என்கிறார் நாராயணன்.
“குறிப்பிட்ட வருமானத்துக்குக் கீழிருப்பவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12வது படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மொத்த பட்ஜெட் 10,200 கோடி ரூபாய்.
ஒரு குடும்பத்திற்கு இலவசமாக நான்கு ஆடுகள், மாடுகள், இலவச மின் விசிறி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவை அறிவிக்கப்பட்டன. ஏழைகளைக் குறிவைத்து எம்.ஜி.ஆர். காலத்தில் திட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், வாக்குகளுக்காக இலவசங்கள் என்று ஆகிப்போனது” என அந்தப் புத்தகத்தில் விமர்சிக்கிறார் நாராயணன்.
2011இல் இலவசங்கள் தொடர்பான விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழில் வெளியான செய்தி
தமிழகத்தில் இலவச திட்டங்கள் ஆரம்பம் – BBC News தமிழ்
ஆனால், விலையில்லாமல் வழங்கப்படும் இந்தத் திட்டங்கள் குறித்த விமர்சனங்களை மறுதலிக்கிறார் மாநில திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான ஜெயரஞ்சன்.
“எது தேவை, எது தேவையற்றது என்பதை பெறுபவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் விலையில்லாமல் வழங்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு பிரிவாக பார்த்து அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு சைக்கிள்களை வழங்கக்கூடாது என காரில் செல்பவர்கள் சொல்லக்கூடாது.
மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டே போகிறது. ஆகவே, எது தேவை என்ற வரையறையும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருக்கும் தொலைக்காட்சி, தற்போது அத்தியாவசியப் பொருளாக மாறியிருக்கிறது.
மிக்சி, கிரைண்டர்களைக் கொடுக்கக்கூடாது என்று சொல்பவர்கள், பெண்கள் மறுபடியும் அம்மியிலும் உரலிலும் உட்கார்ந்து சிரமப்பட வேண்டும் என்று சொல்கிறார்களா? மிக்சி வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைத் தீர்மானிப்பது யார்? அந்தப் பெண்களா அல்லது ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு கருத்துச் சொல்பவர்களா?” என்று கேள்வியெழுப்புகிறார் ஜெயரஞ்சன்.
பொதுவாக இலவசம் வேண்டாம் என்பதை ஆதரிப்பவர்கள், சுதந்திரச் சந்தையை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் சுதந்திரச் சந்தையை ஆதரிக்கவில்லை. தமக்கு வேண்டியவர்களுக்குச் சாதகமான சந்தையையே (Crony Capitalism) ஆதரிக்கிறார்கள் என்கிறார் ஜெயரஞ்சன்.
“தமிழ்நாட்டில் இவ்வளவு நலத் திட்டங்களைச் செயல்படுத்திய பிறகும் நிதிப் பற்றாக்குறை 3.6 சதவீதம். ஆனால், மத்திய அரசில் எவ்வளவு? மாநில அரசு கடனை வாங்கிக் கொண்டே போகிறது என்கிறார்கள். அந்தக் கடனை மாநில அரசுகள்தான் அடைத்துவருகின்றன. ஆனால், மத்திய அரசின் கடன் கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது? அந்தக் கடன்களை யார் அடைப்பது? மக்களுக்கு இலவசம் ஏதும் கொடுக்காமல் எப்படி இவ்வளவு கடன் வந்தது?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயரஞ்சன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலவசங்கள் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்ததை எஸ். நாராயணன் சுட்டிக்காட்டுகிறார்.
“தமிழ்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அதனை இந்தியாவிலேயே இரண்டாவது வளர்ச்சியடைந்த மாநிலமாக ஆக்கியிருக்கிறது. 2003க்கும் 2013க்கும் இடையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருந்தது. 2013-14ல் 80 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது. தனிநபர் வருவாய் தொடர்ந்து உயர்ந்தது. 1991க்கும் 2001க்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவாக இருந்தது. எழுதப்படிக்கத் தெரிந்தோர் விகிதம் 80 சதவீதமானது. தனிநபர் வருவாய் 1,14,000 ரூபாயாக உயர்ந்தது.
2011வாக்கிலேயே 8.5 லட்சம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருந்தன. இவற்றில் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருந்தன. 1993க்கும் 2005க்கும் இடையில் தமிழ்நாட்டில் ஏழையாக இருப்போர் விகிதம் ஆண்டுக்கு 3.31 சதவீதம் குறைந்து வந்தது. மதிய உணவுத் திட்டம், இலவசக் கல்வி, இலவச பாடப் புத்தகம், மிகக் குறைந்த விலையில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்பட்டன. 1973-74ல் 56.4 சதவீதமாக இருந்த ஏழைகளின் விகிதாச்சாரம் 1999-2000ல் 26.1 சதவீதமாகக் குறைந்தது” என தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர்.
இலவசங்களுக்காக மக்கள் வாக்களிக்கிறார்களா? “தமிழ்நாட்டு வாக்காளர்கள் யார் அதிகமாகக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த குணத்தை வைத்துத்தான் தமிழக வாக்காளர்கள் தற்போது குறிக்கப்படுகிறார்கள். சமத்துவம் – சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள்.” என நாராயணனின் புத்தகம் கூறுகிறது.
ஆனால், இந்தக் கூற்றை மறுக்கிறார் ஜெயரஞ்சன். தமிழ்நாட்டில் 1984க்குப் பிறகு, 2016வரை ஒரு முறை ஆட்சியிலிருந்த கட்சி மறுமுறை ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 2006ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கிட்டத்தட்ட முழுமையாக வழங்கிய நிலையிலும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, இலவசத் திட்டங்கள் என்பவை வாக்குகளைக் குறிவைத்து அளிக்கப்படுவதில்லை; மாறாக மக்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கிலேயே அளிக்கப்படுகின்றன என்கிறார் அவர்.
இப்போது நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், விவாதம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை, குஜராத் தேர்தல் முடிவுகள் இதற்கு ஒரு பதிலைத் தரக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்