ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக சார்பில் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கலைஞரின் வெண்கல சிலை அருகே திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
கலைஞரின் சிலையை திறந்து வாய்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; தந்தை சிலையை திறந்து வைக்கும் மகனாக இல்லாமல், தலைவர் சிலையை திறந்து வைக்கும் தொண்டனாக வந்துளேன். ஈரோட்டுக்கும், கலைஞருக்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு, முத்தமிழறிஞர் கலைஞரை ஈரோட்டுக்கு அழைத்து சென்றவர் தந்தை பெரியார், ஈரோட்டில் கலைஞருக்கு 3-வது சிலையை திறந்து வைத்துள்ளேன்.
கலைஞரின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டதுதான் திராவிடர் கழக கொடி, ஈரோட்டில் கலைஞர் இருந்தபோதுதான் பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கி, அதற்க்கு கொடியையும் வடிவமைத்தார். கருப்பு செவ்வகத்தின் நடுவே சிவப்பு வட்டம் இருக்கும் வகையில் திராவிடர் கழகக் கொடியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு காகிதத்தில் கருப்பு மையினால் பூசினார்கள், நடுவில் உள்ள வட்டம் சிவப்பு மை கிடைக்காததால் வெள்ளையாக இருந்தது. கலைஞர் அங்கிருந்த குண்டூசியை எடுத்து தன் விரலில் குத்தி அதிலிருந்து வந்த ரத்தத்தை வெள்ளை வட்டத்தில் பூசி சிவப்பாக்கினார்.
அன்று உருவாக்கப்பட்ட திராவிடர் கழகக் கொடி கலைஞரின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு குறுகுலமாக இருந்தது ஈரோடு நகரம். பெரியாரின் முயற்சியால் சென்னை அண்ணா சாலையில் கலைஞருக்கு முதல் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரியாரின் மறைவுக்கு பின் மணியம்மையார் முயற்சி எடுத்து சென்னை அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலையை நிறுவினார். புதுச்சேரியில் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த கலைஞரை மீட்டு மருந்துவிட்டவர் தந்தை பெரியார்.
கலைஞரை ஈரோட்டுக்கு அழைத்து வந்த பெரியார், குடியரசு வார இதழில் துணை ஆசிரியராக கலைஞரை நியமித்தார். இவ்வாறு ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.