’புழுதி அடங்கவே 10 நிமிடம் ஆகும்’-நொய்டா இரட்டை கோபுர இடிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

நொய்டா இரட்டை கோபுரங்களை தகர்க்கும்போது உருவாகும் புழுதி தரையில் படிவதற்கு 10 நிமிடங்கள் ஆகும்.

உத்தரப் பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. 40 மாடிகள் கொண்ட இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்படவுள்ள நிலையில், இதற்கான பணிகளை எடிஃபைஸ் நிறுவனம் தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்காக, அந்த கட்டடத்தில் ஏற்கனவே 3,700 கிலோ வெடி மருந்து வைக்கப்பட்டுள்ளது.

image
இதுகுறித்து பேசிய கட்டிட தகர்ப்பு பணியினை மேற்கொள்ளும் எடிஃபைஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் மயூர் மேத்தா, “இப்போதைக்கு கடவுளைத் தவிர வேறு யாராலும் இந்த இடிப்புப் பணியினை தடுக்க முடியாது. கட்டிட இடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் ஒவ்வொரு தளத்திலும் வெடிபொருட்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 மீட்டர் தொலைவில் இருந்து ரிமோட் மூலம் இந்த கட்டிடங்கள் வெடிக்கச் செய்யப்படும். தகர்க்கும்போது உருவாகும் புழுதி படிவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். வெடித்துச்சிதறும் கட்டிடக்கழிவுகள் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு இதுபோன்ற பெரியளவிலான கட்டிட தகர்ப்பு பணிகள் நடந்ததில்லை” என்று கூறினார்.

வரும் 28ம் தேதி மதியம் 2:15 முதல் 2:45 மணி வரை, அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அருகாமையில் வசிக்கும் மக்கள் அன்று காலையில் வெளியேற்றப்படுவார்கள். வெடிபொருள் வெடித்தவுடன் கட்டடம் 9 நொடியில் தரைமட்டமாகும் எனக் கூறப்படுகிறது. இடித்தப்பின் கழிவுகளை எடுத்துச் செல்ல 1,200 டிப்பர் லாரிகள் தயாராக இருக்க உள்ளன.

இதையும் படிக்க: வாட்ஸ்அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்து ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.