பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரராக உள்ள அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பிய போதும்,  அமைச்சராக உள்ளதால் இருவரும் இதுவரை  பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டினார். இதையடுத்து,  அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரிய சாமி இருவரையும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.